ஆதார் அட்டை கட்டாயம் இல்லை : சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்கும் வகையில் ஏதேனும் உத்தரவு பிறப்பித்து இருந்தால் அதனை உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கோவாவின் வாஸ்கோ பகுதியில் மைனர் சிறுமி ஒருவர் பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில் மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா பிரிவு, அந்த வழக்கு விசாரணை தொடர்பாக குற்றவாளிகளின் கைரேகைகள் மற்றும் தனித்த சில அடையாளங்களை சி.பி.ஐ. புலனாய்வு அதிகாரிகளுடன் இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. அந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் ஜே.செல்லமேஸ்வர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மத்தியஅரசு திரும்பப்பெற வேண்டும்
மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது, கைரேகை போன்றவை அடங்கிய பயோமெட்ரிக் தகவல்கள் மற்றும் பிற தகவல்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் எழுத்து வடிவில் தன்னுடைய ஒப்புதலைத் தந்த பிறகுதான் மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும் அரசாங்க சலுகைகளைப் பெறுவதற்காக ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் வகையில் ஏதேனும் ஆணைகள் பிறப்பித்திருந்தால் அவற்றை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும். ஆதார் அடையாள அட்டை கட்டாயம் தேவை என்பது கோர்ட்டு உத்தரவை மீறும் விதமாக உள்ளது என்று கடிதம் வந்துள்ளது என்று நீதிபதி பி.எஸ். சவுகான் தெரிவித்துள்ளார். மேலும்,  ஒரு கடிதத்தில் ஆதார் அடையாள அட்டை இல்லாததால் எனது திருமணத்தை பதிவு செய்யவில்லை என்றும் மற்ற கடிதங்கள் இதனால் சொத்துகளை பதிவு செய்ய முடியவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆதார் அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டினர்.

No Comments

Leave a Comment