சட்டம் 370: என்ன நடக்கிறது காஷ்மீரில்..

சட்டம் 370: என்ன நடக்கிறது காஷ்மீரில், ஓர் வரலாற்று தொகுப்பு..

இந்திய ஜனநாயகம் மனித உரிமைகளுக்குத் தரும் மரியாதையைத் தெரிந்துகொள்ளக் காஷ்மீர் சரியான உரைகல். ஜனநாயக அரசியல் அமைப்பின் மைய அம்சங்களில் ஒன்று அரசியல் சாசனம் உறுதியளித்துள்ள உரிமைகளை மக்கள் அனுபவிக்கும் நிலையில் அது செயல்பட வேண்டும். எனவே, அரசின் செயல்பாடுகள் சட்ட வரம்புக்குள் இருக்க வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது. இதனோடு தொடர்புடையதுதான் விமர்சனம். அரசின் செயல்பாடுகளைக் குடிமக்கள் விமர்சிப்பதென்பது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அறிகுறி. இதற்கு மக்கள் தொடர்புச் சாதனங்களின் பங்கு அவசியமானதாகிவிடுகிறது. செய்திகளை மக்கள் முன்வைப்பதில் பத்திரிகைகளும் பிற ஊடகங்களும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
download1
இந்தப் புரிதலுடன் இந்திய ஜனநாயகத்தை, குறிப்பாக அது காஷ்மீர்ப் பிரச்சினையில் செயல்படும் விதத்தை, கவனிக்கும்போது, எவருக்கும் எழும் கேள்வி: இந்தியா ஜனநாயக நாடுதானா? காஷ்மீரில் சட்ட வரம்பை அதிகாரத்தின் தேவைகள்தாம் தீர்மானிக்கின்றன. இந்நிலையில் ஜனநாயக உரிமை என்பது கேலிக்கூத்தான விஷயமாகிறது. காஷ்மீரில் கடந்த அறுபது ஆண்டுகளாக இதுதான் நிலைமை. மிகப் பெரிய ஜனநாயகவாதி, மதச்சார்பற்றவர், சோஷலிஸ்ட் என உயர்வாகப் பேசப்படும் நேரு, காஷ்மீர் விஷயத்தில் கோர முகத்துடன் காட்சி தருகிறார். அவர் மட்டுமல்ல, இந்தியாவின் பத்திரிகைகளும் காஷ்மீர் விஷயத்தில் அரசாங்கத்தின் பிரச்சார பீரங்கிகளாக, தங்கள் ஜன நாயகப் பொறுப்பை முற்றாகத் துறந்து செயல்பட்டு வருவதையும் நாம் காணலாம்.

‘காஷ்மீரிகள் பாகிஸ்தானின் கைக்கூலிகள், மத அடிப்படைவாதிகள், ஆயுதமேந்திய பயங்கரவாதிகள், இந்தியாவில் முஸ்லிம் மதக் கலவரங்களுக்கு வித்திட்டு வருபவர்கள், பல்லாயிரக்கணக்கான இந்துக்களைக் கொன்றவர்கள், இந்திய ஒற்றுமையைச் சீர்குலைப்பவர்கள், இவர்களை நல்வழிப்படு஢த்த இந்திய அரசு கோடி கோடியாகச் செலவழிக்கிறது. ஆனால், இவர்கள் காட்டுவதெல்லாம் இந்திய விரோத மனோபாவம்தான்.’ இதுதான் ஊடகங்களின் ஒத்துழைப்புடன் இந்திய அரசு காஷ்மீர் மக்களைப் பற்றி ஏற்படுத்தியுள்ள பிம்பம்.

வரலாறும் அங்குள்ள உண்மை நிலையும் மேற்கூறிய கருத்துகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதுதான் சங்கடமான உண்மை. நம்மூர் ரோஜா திரைப்படம் காட்டிய பிம்பம்தான் என்ன? காஷ்மீரிகளின் உணர்வைக் கொச்சைப்படுத்துவதன் மூலம்தான் அது தேசப்பற்றைப் பெருமையாகப் பேசியது.

காஷ்மீர்ப் பிரச்சினையைப் புரிந்துகொள்ளக் காஷ்மீரிகளின் வரலாற்றைச் சுருக்கமாகவாவது தெரிந்துகொள்வது அவசியம். காஷ்மீரில் நடப்பது தேச விடுதலைப் போராட்டம். இது கடந்த 150 ஆண்டுகளாக நடந்துவருகிறது. ஜம்மு-காஷ்மீ஢ர் எனப்படும் இம்மாநிலம் மூன்று முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியது. அவை ஜம்மு, காஷ்மீர்ப் பள்ளத்தாக்கு, லடாக் பகுதிகள். இம்மாநிலத்தில் 12க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. எனினும், காஷ்மீரி, டோ க்ரி, பஹாரி, லடாக்கி, உருது ஆகியவை முக்கியமான மொழிகள். இங்கு இஸ்லாமியர்கள் 70%, அடுத்து இந்துக்கள் 25%. மீதமுள்ளவர்கள் புத்த மதத்தினரும் சீக்கியர்களும். புத்த மதத்தினர் லடாக் பகுதியில் மட்டுமே வசிக்கின்றனர்.
download (1)
காஷ்மீர் ஜம்முப் பகுதியுடன் இணைந்தது 1846இல். அப்போது ஜம்மு, டோ க்ரா அரச குடும்பத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதற்கு முன்பு காஷ்மீர், சீக்கிய அரசனான ரஞ்சித் சிங்கின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. ஆங்கிலேயர்கள் ரஞ்சித் சிங்கைத் தோற்கடித்துப் பஞ்சாப் பகுதியைக் கைப்பற்றினர். அப்போதைய டோ க்ரா அரசனான குலாப் சிங் ரஞ்சித் சிங்கைத் தோற்கடிக்க ரகசியமாக உதவியதால், ஆங்கிலேயர்கள் காஷ்மீரை ஜம்முவுடன் இணைத்து குலாப் சிங்கிடம் ஒப்படைத்தனர். குலாப் சிங்கால் அதற்கு ஒரு தொகையும் தரப்பட்டது. இந்து அரசனான குலாப் சிங்கின் நிர்வாகிகளில் 90%க்கும் மேல் இந்துக்கள். அவர்கள் காஷ்மீரிப் பிராமணர்களான பண்டிட்கள். காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் முஸ்லிம்கள் 90% பேர். அப்போது அவர்களுக்குப் படிப்பறிவு மிகவும் குறைவு. விவசாயமும் பிற சிறு கைத்தொழில்களும்தான் அவர்களின் பொருளாதாரச் செயல்பாடுகள். மதரீதியாக முஸ்லிம்கள் என்றாலும் இவர்களது இஸ்லாம் சூஃபிக்களால் பரப்பப்பட்டது. இவர்கள் முக்கியத்துவம் தந்தது பக்திக்கும் மிஸ்டிசிசத்துக்கும். மனிதநேயமும் பொறுமையும் இவர்களது சமூக நெறிகளை நிர்ணயித்தன. இந்தியப் பகுதியில் உள்ள பிற முஸ்லிம்களிடமிருந்து காஷ்மீர் முஸ்லிம்கள் வேறுபட்டவர்கள் என்பதை அவர்களோடு நேரில் கலந்து பழகியபோது எங்களால் உணர முடிந்தது.

டோ க்ரா வம்சத்தின் கொடூர ஆட்சிக்கான எதிர்ப்பு, இயக்கமானது 1931இல். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவரான ஷேக் அப்துல்லா போன்றவர்கள் எதிர்ப்பை இயக்கப்படுத்தினார்கள். 13 ஜூலை 1931இல் முப்பதுக்கும் மேற்பட்ட போராளிகளை குலாப் சிங்கின் போலீஸ் படை சுட்டுக் கொன்றது. அதனால், 1932இல் ‘ஜம்மு-காஷ்மீர் முஸ்லிம் மாநாடு’ என்னும் விடுதலைக்கான அமைப்பு உருவானது. அதன் நோக்கம், ஆங்காங்கே ஆட்சிக்கு எதிராக நடைபெற்றுவந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதும் ஜனநாயக அரசமைப்பை நிறுவுவதுமாக இருந்தது. 1938இல், அதன் பெயரைத் ‘தேசிய மாநாடு’ என மாற்றினார்கள்.

காஷ்மீரிகளின் போராட்டம் அடிப்படையில் மதச் சார்பற்ற, ஜனநாயகக் காஷ்மீரை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. முஸ்லிம் மாநாட்டுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் அப்துல்லா தன் முதல் உரையில், “காஷ்மீர் மக்களின் போராட்டம் இனவாதமல்ல என்பதை நாம் பலமுறை வலியுறுத்திவந்துள்ளோம். இந்தக் கட்சி பல இன மக்களின் குறைகளைப் பற்றிப் பேச உள்ள மேடை. இது சகக் குடிமக்களான இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் உதவத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டுள்ளது. பல இன மக்களும் ஒற்றுமையுடன் இருக்கும்போதுதான் முன்னேற்றம் சாத்தியமாகும். ஒற்றுமையான வாழ்க்கைக்கு மற்ற இனத்தவரின் நியாயமான உரிமைகளை மதிப்பது முக்கியத் தேவையாகும். மீண்டும் கூறுகிறேன், காஷ்மீரிகளின் போராட்டம் இனவாதப் போராட்டமல்ல” என்றார்.

முஸ்லிம் மாநாடு என்னும் பெயரைத் தேசிய மாநாடு என மாற்றக் காரணமாக இருந்தவர்கள் நேருவும் கவிஞர் இக்பாலும். எனவேதான், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு எனப் பெயர் வந்தது. இங்குத் தேசம் என்பது காஷ்மீரிகளின் தேசம். முஸ்லிம் என்பதைவிடக் காஷ்மீரி என்னும் அடையாளத்தையே அவர்கள் விரும்புகின்றனர். காஷ்மீரி என்பது இந்தியர் என்பதைப் போன்று பல இன மக்களையும் உள்ளடக்கிய தேசிய அடையாளம். இது ஒரு வரலாற்றை, ஒரு பண்பாட்டை மையமாகக் கொண்ட அடையாளமாகும். இதைப் புரிந்துகொள்ளாமல் காஷ்மீர்ப் பிரச்சினையைப் புரிந்துகொள்ள இயலாது.

தேசிய மாநாட்டுக் கட்சிக்குப் பெருவாரியான மக்களின் ஆதரவு கிடைத்தது 1944இலிருந்து எனலாம். அக்கட்சி ‘புதிய காஷ்மீர்ப் பிரகடனம்’ (Naya Kashmiri Manifesto) என்பதை மக்கள் முன்பு வைத்தது. டோ க்ரா ராஜாவின் கொடூரமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த பிறகு அமைய இருந்த சமுதாயத்தில் பெண்கள், உழைக்கும் மக்கள், மற்றும் நலிவுற்றவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்; புரட்சிகரமான நிலச்சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப்படும் போன்றவற்றை முன்வைத்தது. 1951இல், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஷேக் அப்துல்லா உண்மையிலேயே புரட்சிகரமான நிலச் சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார். அதுவே இந்தியாவில் ஏற்பட்ட உண்மையான முதல் நிலச் சீர்திருத்தம். ஜமீன்தார்களுக்கு எவ்விதமான நஷ்டஈடும் கொடுக்கப்படவில்லை.

காஷ்மீரி என்னும் அடையாளத்தை மதவாதிகள் எதிர்த்துவருகின்றனர். இவர்கள் அப்துல்லாவை எதிர்த்தனர். ஆனால், மதச் சார்பற்ற, முற்போக்குச் சிந்தனையும் கொண்ட அப்துல்லா காஷ்மீர் மக்களின் ஏகோபித்த தலைவராக உயர்ந்தார்.

1946இல், ‘டோ க்ரா ராஜாவே, காஷ்மீரை விட்டு வெளியேறு’ என்னும் போராட்டம் வெடித்தது. ‘சுதந்திரக் காஷ்மீர் எங்கள் பிறப்புரிமை’ என்னும் முழக்கம் தோன்றியது. தமது நேரடி ஆட்சியில் இருந்த பகுதிகளை ஆங்கிலேயர் 1947இல் இந்தியா-பாகிஸ்தான் என உருவாக்கிச் சுதந்திரம் வழங்கினர். அதே சமயம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலிருந்த 562 ராஜாக்களும் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ தங்கள் நிலப்பரப்பை இணைத்துக்கொள்ளவோ அல்லது தனித்திருக்கவோ அவரவர் விருப்பம்போல முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றனர் ஆங்கிலேயர். ஹைதராபாத் நிஜாமும் (முஸ்லிம்) காஷ்மீரின் ஹரி சிங்கும் (இந்து) தனித்திருக்க விரும்பினர்.

1946இல் தொடங்கிய ஆயுதமேந்திய தெலுங்கானா உழவர்கள் போராட்டம் வேகமாகப் பரவிவந்தது. 3000க்கும் அதிகமான கிராமங்களைப் போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஜாகீர்தாரர்களின் (ஜமீன்தார்களின்) வசமிருந்த நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்குப் பிரித்தளித்தார்கள். இதனை எதிர்க்க முடியாத நிஜாம், பிறகு இந்தியாவுடன் இணைந்தார். இந்திய ராணுவம் சுதந்திர இந்தியாவில் தன் சொந்தக் குடிமக்கள்மேல் முதல்முறையாக ஏவிவிடப்பட்டது. 1948 செப்டம்பரில், இந்திய ராணுவம் நிஜாமின் எல்லைக்குள் நுழைந்து, பல ஆயிரக்கணக்கான போராளிகளைக் கொன்றது. ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானவர்களைக் கைதுசெய்து சிறையிலடைத்துச் சித்திரவதை செய்தது. கம்யூனிஸ்ட் கட்சியும் தடை செய்யப்பட்டது. 1951வரை நடந்த இந்த ராணுவ அடக்குமுறை நேருவின் ஜனநாயகப் பண்பை வெட்ட வெளிச்சமாக்கியது. இந்தியாவின் மையப்பகுதியில் பொதுவுடமை அரசு ஒன்று நிறுவப்பட்டால், அது இந்தியாவின் மிகப் பெரிய எதிர் சக்தியாக உருப் பெற்றுவிடும் என்பதை விரும்பாத நேரு, சுதந்திர இந்தியர்களின் மேல் ராணுவத்தை ஏவிவிட்டார்.

காஷ்மீரில் காட்சிகள் வேறுவிதமாக அமைந்தன. இந்து அரசனான ஹரி சிங் (தற்போதுள்ள கரண் சிங்கின் தந்தை) தன் ஆட்சியையும் பதவியையும் துறக்க மனமில்லாததால், முதலில் பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ளப் பேரம் பேசினார். தன் அரசப் பதவியையும் அதிகாரத்தையும் இழக்காத வகையில் அந்த இணைப்பு இருக்க வேண்டும் என்பதே அவரது நிபந்தனை. 1947 ஆகஸ்டில், பாகிஸ்தானுடன் அதற்கான ஒப்பந்தமும் செய்துகொண்டார். அரசனின் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமான இந்து அதிகாரிகள் அதை எதிர்த்தனர். காஷ்மீர் சுதந்திர நாடாக இருப்பதே மேல் என்பது அவர்கள் நிலைப்பாடு.

அதே சமயம் அப்துல்லாவும் தேசிய மாநாட்டுக் கட்சியினரும் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைவதை எதிர்த்தனர். ஜின்னாவின் முஸ்லிம் லீக் கட்சி ஜமீன்தார்களின் கட்சி. அது காஷ்மீரிகளின் பண்பாட்டிற்கு ஒத்துவராது என்பது அப்துல்லாவின் கருத்து. காஷ்மீர் சுதந்திர நாடாக இருக்க வேண்டும் அல்லது இந்தியாவுடன் இணைய வேண்டும் என்பதே அவர்கள் நிலைப்பாடு. அப்துல்லாவுக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருந்ததை நாம் கவனிக்க வேண்டும்.

அக்காலகட்டத்தில் இந்தியாவின் பல பாகங்களில் இன மோதல்கள் வெடித்தன. கூட்டம் கூட்டமாக இந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவுக்குள்ளும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குள்ளும் இடம்பெயர்ந்தனர். அந்தச் சூழலில், 1947 அக்டோ பரில், வடமேற்கு மாவட்டமான பூண்ச் (Poonch) பகுதியில் ஹரி சிங்கின் ஆட்சிக்கு எதிராகக் கலகம் எழுந்தது. மேற்குப் பஞ்சாபிலிருந்தும் எல்லைப்புற மாநிலங்களிலிருந்தும் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்துக்கள் ஜம்முப் பகுதிக்கு வந்து சேர்ந்திருந்த காலமது. அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அரசனின் காவல் துறை, ஆர்.எஸ்.எஸ்.ஸின் துணையுடன் அப்பகுதியிலிருந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொல்வதிலும் விரட்டியடிப்பதிலும் ஈடுபட்டது. 24 அக்டோ பர் 1947 அன்று, பூண்ச் கலகக்காரர்களுக்குத் துணைபுரிய வடமேற்கு எல்லைப்புறத்திலிருந்த பட்டாண்கள் ஜம்மு-காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்தனர். அவர்களில் ராணுவ வீரர்களும் இருந்தார்கள். பாகிஸ்தான் அரசு தேவையான தளவாடங்களையும் வாகனங்களையும் தந்துதவியது. அவர்கள் பாராமுல்லா நகரைக் கைப் பற்றி ஸ்ரீநகருக்குச் சமீபம்வரை வந்துவிட்டனர். அப்படி அவர்கள் முன்னேறி வந்தபோது, ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றனர், முஸ்லிம் பெண்களைக் கற்பழித்தனர், சொத்துகளைச் சூறையாடினர்.

அப்படிப்பட்ட சூழலில், ஹரி சிங்கின் அதிகாரிகள் ஜம்முப் பகுதியிலிருந்து வெளியேறிவிட்டார்கள். நிர்வாகம் நிலைகுலைந்தது. அதற்குச் சில வாரங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்ட அப்துல்லா, சரிந்து வந்த அரசு நிர்வாகத்தைச் சீராக்கினார். 26 அக்டோ பர் 1947 அன்று நிபந்தனையுடன் கூடிய இணைப்புச் சாசனத்தில் ஹரி சிங் கையெழுத்திட்டார். பாதுகாப்பு, அயலுறவு, நாணயம், செய்தித் தொடர்பு ஆகியவற்றை இந்தியாவின் அதிகாரத்தின் கீழ் ஒப்படைப்பதாக ஒப்பந்தம் ஏற்பட்டது. அதை ஏற்ற இந்திய அரசு மறுநாள் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சட்டம், ஒழுங்கு சீரடைந்தவுடன், ஜம்மு-காஷ்மீர் மக்களின் சம்மதத்தை அறிந்து இந்தியாவுடனான இணைப்பு முடிவுசெய்யப்படும்’ என அறிவித்தது. இந்திய ராணுவம் வந்ததும் தேசிய மாநாட்டுத் தொண்டர்களின் உதவியுடன் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடித்தனர்.

அந்த இணைப்புச் சாசனத்தில் கையெழுத்திட்ட மவுன்ட்பேட்டனும் இணைப்பு நிரந்தரமாக்கப்பட வேண்டுமென்றால், அந்த மக்களின் சம்மதத்தையும் கேட்ட பின்னரே செய்ய வேண்டும் என்னும் நிபந்தனையோடு இணைப்பு தற்காலிகமானதுதான் என்ற நிலையில் அதனை ஏற்றார். 1947 நவம்பர் இரண்டாம் நாள் இந்திய வானொலியில் ஆற்றிய உரையிலும் ‘ஜம்மு-காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை அம்மக்களே தீர்மானிப்பார்கள்’ என்று நேரு கூறினார். பின்பு, 31 டிசம்பர் 1947இல், ஐ.நா. சபைக்குக் கொடுத்த புகாரிலும் அந்த மாநில மக்களின் கருத்தை அறிய, ஐ.நா. சபையின் மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்திய அரசு உறுதியளித்தது. அந்த உறுதிமொழி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

ஜனநாயகக் கொள்கையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக்கொண்டு வந்ததைச் சாதுரியமாக இந்தியா நியாயப்படுத்திவருகிறது. அதாவது, காஷ்மீர் மக்களின் கருத்தைக் கேட்பது என்பதுதானே நிபந்தனை? 1951இல், வயதுவந்த எல்லாத் தரப்பினரும் கலந்துகொண்ட, அம்மாநிலத்தின் அரசியல் சாசனத்தைத் தயாரிப்பதற்கான குழுவைத் தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலைச் சுட்டிக்காட்டி ஏதோ ஒருவகையில் மக்களின் கருத்தை அறியும் வாக்கெடுப்பு நடந்ததாக இந்திய அரசு கூறிவருகிறது. அந்த வாக்கெடுப்பு ஐ.நா. சபையின் கண்காணிப்பில் நடக்கவில்லை; மேலும் அது இணைப்பு பற்றிய வாக்கெடுப்பும் அல்ல என்பதை ஒரு குறையாக இந்திய அரசு கருதவில்லை. அடுத்து 1953இல், பாகிஸ்தான் அமெரிக்கக் கூட்டணியுடன் இணைந்ததைச் சுட்டிக்காட்டி, பாகிஸ்தானின் அயலுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டதால், காஷ்மீரில் உடனடியாக வாக்கெடுப்பு நடத்த முடியாது என்றது இந்திய அரசு. மேலும், 1957இல் காஷ்மீர் மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட சட்டமன்றம் நிறைவேற்றிய, காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்னும் சட்டத்தையும் அது துணைக்கழைத்துப் பேசுகிறது. தான் செய்வது சட்டரீதியாகச் சரியெனக் காட்டிக் கொள்ளும் இந்தியா, தான் நியாயமாகக் காஷ்மீரை உரிமை கொண்டாட முடியாது என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் 370ஆம் பிரிவின்படி, ஜம்மு-காஷ்மீருக்குத் தன்னாட்சி உரிமையும் சிறப்பு அந்தஸ்தும் வழங்கப்பட்டன. 1951இல், ஷேக் அப்துல்லா காஷ்மீரின் பிரதமர் ஆனார். அம்மாநிலத்தின் ஜனாதிபதியை (அப்போதைய ஆளுநர்) அதன் சட்டமன்றம் தான் தேர்வுசெய்ய வேண்டும். ஆனால், நேரு அப்துல்லாவை நிர்ப்பந்தித்து முப்பது வயதான கரண் சிங்கை (எந்த அரச வம்சத்தின் கொடூர ஆட்சியை எதிர்த்துக் காஷ்மீர் மக்கள் போராடினார்களோ அதன் வாரிசை) ஜனாதிபதியாக்கினார். 1952இல் அப்துல்லாவும் நேருவும் தில்லி ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டார்கள். அது காஷ்மீரின் தன்னாட்சியை அங்கீகரித்தது.

1952-53இல், ஜம்மு பகுதியில் ‘பிரஜா பரிஷத்’ என்னும் இந்து அமைப்பு (ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரு பகுதி) அப்துல்லாவை எதிர்த்தது. அவரது மாநில சுயாட்சியை முழுமையாக நீக்க வேண்டும்; காஷ்மீர் முழுமையாக இந்தியாவின் ஒரு பகுதியாக வேண்டும் என முழக்கங்களுடன் போராட்டத்தில் அவ்வமைப்பு ஈடுபட்டது. அதில் தில்லியின் கைவரிசையும் இருந்ததாக ஷேக் அப்துல்லா சந்தேகித்தார். மதச்சார்பின்மை, ஜனநாயகம் எனப் பேசிய நேரு அவற்றில் முழு ஈடுபாடு கொண்டிருக்கவில்லை என்று எண்ணிய அப்துல்லா முழுச் சுதந்திரமே தங்கள் நோக்கம் என்று பொது மேடைகளில் பேசலானார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட நேரு, வெளிநாட்டுடன் ரகசியத் தொடர்புகொண்டு இந்தியாவின் ஒற்றுமையைச் சீர்குலைக்கிறார் எனக் கூறி ஷேக் அப்துல்லாவின் ஆட்சியை ஆகஸ்ட் 1953இல் கலைத்துவிட்டு அவரையும் சிறையிலடைத்தார். அப்துல்லா பதினெட்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

ஷேக் அப்துல்லாவின் ஆட்சியைக் கலைத்ததில் மூன்று பேர் முக்கியப் பங்காற்றினார்கள். பக்ஷி குலாம் முகமது, டி.பி. தர் (காஷ்மீர்ப் பண்டிட்டான இவர் ஷேக்கின் அமைச் சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர்), மற்றும் காஷ்மீரின் அப்போதைய ஜனாதிபதியான கரண் சிங். இவர்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் நேருவின் அரசு அளித்துவந்தது. 1953 ஆகஸ்டில், பக்ஷி குலாம் முகமதின் அரசு அமைந்தது. அந்தப் பொம்மை அரசை வைத்துக்கொண்டு,தான் முன்பு ஒப்புக்கொண்ட, கொடுத்த உறுதி மொழிகளை டெல்லி அரசு படிப்படியாகக் கைவிட்டது.

1954இல் இந்திய அரசியல் சாசனச் சட்டம் ஒன்று ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது. இந்தச் சட்டம், ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசுக்குச் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தந்தது. பக்ஷி குலாம் முகமதின் அரசும் அதற்கு ஒப்புதலளித்தது. இதன்படி, இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 370 வெறும் காகிதப் புலியாயிற்று. 1957 ஜனவரி 26இல், குலாம் முகம்மதுவின் அரசு மற்றுமோர் அரசியல் சாசனச் சட்டத்தை மேற்கொண்டது. அதன்படி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்.

1958இல் இன்னுமொரு சட்டம் ஜம்மு-காஷ்மீரை மத்திய நிர்வாகச் சேவையின் கண்காணிப்புக்குக் கீழ்க் கொண்டுவந்தது. 1964-65இல் இயற்றப்பட்ட சட்டத்தால், ஜம்மு-காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்படும் அரசைக் கலைக்கும் அதிகாரத்தையும் மத்திய அரசு தனதாக்கிக்கொண்டது.

இப்படியாகக் காஷ்மீர் மக்கள் தங்கள் தேசத்தின் சுதந்திரத்திற்காக நடத்திய போராட்டத்தை, கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு நேருவின் அரசு முறியடித்தது. அம்மக்களின் நியாயமான கோரிக்கைகளைக் கொச்சைப்படுத்தி அவர்களை அவமதித்தது. இந்தச் சதியில் ஆர்.எஸ்.எஸ்.ஸும் பங்கேற்றது. கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் சதியை உணர்ந்த காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 70களிலும் 80களிலும் இந்திய அரசை எதிர்த்து ஊர்வலம், பொதுக்கூட்டம், பிரச்சாரம் என்னும் அளவிலேயே அப்போராட்டம் இருந்தது. ஆனால், இந்தியாவின் அடக்குமுறை, காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கும் வகையில் கடுமையாக இருந்தது.

இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான பிரச்சினையில் காஷ்மீரைப் பயன்படுத்திக்கொள்கின்றன. காஷ்மீர்ப் பிரச்சினை தீர்க்கப்படுவதில் இரு நாடுகளுக்கும் அக்கறையில்லை. ஆனால், 1980களின் இறுதியில் காஷ்மீர் மக்களின் போராட்டம் ஆயுதமேந்திய போராட்டமாக உருவெடுத்தது. அதற்குப் பாகிஸ்தான் உதவியது. 1989 ஆகஸ்டில், தேசிய மாநாட்டுக் கட்சியின் ஊழியர் ஒருவர் சுடப்பட்டார். அதன் விளைவாக, அரசாங்கத்துக்கு ஆள்காட்டிகளாக இருந்த வேறு பல முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர். 1989 அக்டோ பரில் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரும் அதற்கு இரண்டு மாதங்கள் கழித்து நீதிபதி ஒருவரும் கொலையுண்டார்கள். 1990 பிப்ரவரியில், தொலைக்காட்சி நிலைய இயக்குநர் கொல்லப்பட்டார். இப்படு கொலைகள் மத அடிப்படையிலானவையல்ல.

370 வது பிரிவு கூறுவது என்ன?

370. (1) இந்த அரசியல் சாசனத்தில் யாது கூறப்பட்டிருப்பினும்

அ) 238 ஆவது கோட்பாட்டில் உள்ளவற்றை ஜம்மு நாடாளுமன்றத்திலுள்ள அதிகாரம்

(ஆ) அந்த மாநிலம் சம்பந்தமாக சட்டம் இயற்றுவத்ற்கு நாடாளுமன்றத்திலுள்ள அதிகாரம்

(1) அந்த மாநிலத்தைக் குடியேற்ற நாடான இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்ட ஆவணத்தில் அந்த மாநிலம் பற்றிக் குடியேற்ற நாடான இந்தியாவுக்குச் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரமுள்ளதாகக் குறிப்பிடப்பட்ட விவகாரங்களுக்கும் அதோடு ஒத்திருக்கும் விவகாரங்களுக்கும் மத்தியப் பட்டியலிலும் மத்திய மற்றும் மாநிலப் பட்டியலில் இருக்கின்றவை எனக் குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்படும் விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசைக் கலந்தாலோசித்த பின்னரும்

(2) அந்த மாநில அரசின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவர் தம் உத்தரவில் குறிப்பிடத்தக்க அத்தகைய பட்டியல்களில் உள்ள வேறு விவகாரங்கள் பற்றியும் மட்டுமே சட்டம் இயற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

விளக்கம் : இந்தக் கோட்பாட்டில் வரும் மாநில அரசாங்கம் என்ற சொல் குடியரசுத் தலைவரால் தற்காலிகமாக ஜம்மு காஷ்மிரின் மகாராஜா என்று அங்கீகரித்துள்ள நபரைக் குறிக்கும். அந்த மகாராஜா 1948 மார்ச்சு மாதம் 16 ஆம் நாள் வெளியிட்டுள்ள பிரகடனப்படியுள்ள தம் அமைச்சரவையின் அறிவுரைக்கு ஏற்பச் செயல்பட வேண்டும்.

(இ) இந்தக் கோட்பாடும் மற்றும் ஒன்றாவது கோட்பாடும் அந்த மாநிலத்துக்கு அனுசரிக்கப்பட வேண்டும்.

(ஈ) குடியரசுத் தலைவரின் உத்தரவில் குறிப்பிடும் விதி விலக்குகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டு இந்த அரசியல் சாசனத்தில் உள்ள மற்ற விதிகளும் அனுசரிக்கப்படலாம்.

ஆனால் (ஆ) கிளைக் கூறின் (1) ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதும், அந்த அந்த மாநிலத்தை இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்டதுமான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது, இதற்கு முந்தைய விதியில் கூறப்படாத விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது.

(2) (1) வது கூறின் (ஆ) கிளைக் கூறின் (2)வது பத்தியில் உள்ளபடி அல்லது அந்தக் கூறின் (ஈ) இணைக் கூறின் இரண்டாவது விதியில் உள்ளபடி மாநில அரசாங்கத்தின் சம்மதத்தை அந்த மாநிலத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு முன்னர் பெற்றிருந்தால் அதனை அரசியல் நிர்ணய சபையில் அத்தகைய முடிவு எடுக்கப்படுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(3) இந்தக் கோட்பாட்டில் இதற்கு முன்னர் யாது கூறப்பட்டிருப்பினும் தாம் குறிப்பிடும் அத்தகைய நாளிலிருந்து இந்தக் கோட்பாட்டில் உள்ளவை செயல் இழக்கும் அல்லது அத்தகைய மாற்றங்களூக்கும் விதி விலக்குகளுக்கும் உட்பட்டுச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு பொது அறிவிக்கை மூலம் குடியரசுத் தலைவர் அறிவிப்பு தரலாம்.

எனினும் அத்தகைய அறிவிப்பை செய்வதற்கு முன் (2) வது கூறிலுள்ளபடி அந்த மாநிலத்தின் அரசியல் நிர்ணய சபையால் அந்த அறிவிப்பு பரிந்துரை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஜம்மு – காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரைப் பகுதி இதுதான்..

ஜம்மு – காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும் … … எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக் கொண்டோம்” எனக் கூறுகிறது. இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை ஜம்மு – காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஜம்மு – காஷ்மீருக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவு – தொடர்பு பற்றிய ஒரு விளக்கத்தையும் அல்லது வரையறையையும் தங்களுக்குத் தாங்களே செய்து கொண்டனர்..-எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் விதி 144 அந்நாட்டுக்கு உரிய தேசியக் கொடியின் அமைப்பை விவரிக்கிறது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு வண்ணத்தில் இலங்கும். அக்கொடியின் கம்பை ஒட்டி சமமான இடைவெளிகளைக் கொண்ட சமமான அகலம் கொண்ட செங்குத்தான வடிவில் – வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கும். கொடியின் நடுவில் வெள்ளை வண்ணத்தில் ஏர் வரையப்பட்டிருக்கும். ஏரின் முனை வெள்ளைக் கோடுகளை நோக்கி இருக்கும்.1000px-Jammu-Kashmir-flag.svg copy

காஷ்மீர்ப் பிரச்சினை மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டே போகிறது. இந்திய அரசு இப்பிரச்சினையில் ஏன் இப்படிச் செயல்படுகிறது? காஷ்மீர்ப் பிரச்சினை தனக்கு அவமானமென்பதையே உணராமல், தன் தார்மீகக் கடமையைக் கைவிட்டு அம்மணமாக நிற்கிறது இந்திய அரசு. அதன் அணுகல் 1947இலிருந்தே பெரும்பாலும் பிராமணர்களையே உள்ளடக்கிய காஷ்மீரி இந்துக்களுக்கு முக்கியத்துவம் தருவதாகவே உள்ளது. அன்றிலிருந்தே காஷ்மீர் நிர்வாகத்தில் 90% அதிகமாகப் பிராமணர்கள் இருந்துவருகின்றனர்.

இந்திய அதிகார வர்க்கத்திலும் (1950-60களில்) 80% அதிகம் பிராமணர்கள் அங்கம் வகித்தனர். ஒட்டு மொத்த இந்தியாவிலும் 5% சதமே உள்ள பிராமணர்களின் அதிகாரம் இந்துத்துவ அரசியல் சக்தியாகச் செயல்பட்டுவந்தது, வருகிறது எனலாம். மேலும், இந்திய அரசும் பல பத்திரிகைகளும் முன்வைக்கும் வாதம் இதுதான்: ‘இப்போது ஆண்டொன்றுக்கு 6000 கோடி ரூபாய் செலவிடப்பட்டு ராணுவம் காஷ்மீர் மண்ணைக் காப்பாற்றிவருகிறது. நம் நாட்டுப் பாதுகாப்பிற்குக் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பது அவசியம்.’ இது அர்த்தமற்ற வாதம் எனத் தோன்றுகிறது. இன்று ஒரு நாட்டுக்கு அண்டை நாட்டிலிருந்து ஆபத்து வர வேண்டியதில்லை.

எங்கோ இருக்கும் அமெரிக்கா அப்பட்டமான பொய் சொல்லி ஈராக்கையே சின்னாபின்னமாக்கிவிட்டது. இந்த நிலையில், காஷ்மீர் நம்முடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமக்கு ஆபத்து வருவது ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்துதான்.

——-

About the author  ⁄ Author

No Comments

Leave a Comment