★ என்னதான் முன்னேற்பாடுகளுடன் நாம் தயாராக இருந்தாலும் அதையும் மீறி அன்றாட வேலைகள் இருக்கதான் செய்யும். அப்படி தவிர்க்க முடியாத வேலைகளில் ஈடுபடும்போது வேலை செய்துக்கொண்டே திக்ரு, தஸ்பீஹ், ஸலவாத்களை சொல்லிக் கொண்டிருக்கலாம்.
★ இரவுத் தொழுகைக்கு தக்க துணையுடன் பாதுகாப்பான சூழ்நிலையில் சென்றுவர வாய்ப்புள்ள சகோதரிகள் இயன்றவரை பள்ளிக்கு சென்று ஜமாஅத்துடன் தொழுவதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.
★ சப்தங்கள் இல்லாத அமைதியான சூழல் கிடைக்கும்போதெல்லாம் திருக்குர்ஆனின் சிறிய/பெரிய சூராக்களை மனனம் செய்யலாம். அல்லது ஏற்கனவே மனனம் செய்து மறந்திருந்தால் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
★ இரவு நேரங்களில் தனிமையில் அமர்ந்து அதிகமாக துஆ செய்யலாம்.
அவரவர் குர்ஆன் ஓதும் வேகத்துக்கு தகுந்தமாதிரி ஒருநாளைக்கு இத்தனை ஜுஸ்உ என்று திட்டமிட்டு குறிப்பிட்ட நாட்களில் திருக்குர்ஆனை ஓதி முடித்தால் அதிகமான நாட்களுக்கு நீட்டிக்காமல், லைலத்துல் கத்ரு வரக்கூடிய கடைசிப் பத்து நாட்களுக்கு முன்பே ஒருமுறையோ/இரண்டு முறைகளோ குர்ஆனை ஓதி முடித்துவிடலாம். இயன்றால் மீண்டும் கடைசிப் பத்தில் புதிதாகவும் ஓதத் துவங்கலாம்.
★ 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை நோன்பு நோற்கவும், 5 வேளைத் தொழுகை உட்பட சிறு சிறு அமல்களைச் செய்யவும் ஆர்வத்தைத் தூண்டுவதோடு, டிவி/கேம்ஸ்/இணையம் போன்றவற்றில் அவர்கள் டைம் பாஸ் பண்ணக்கூடிய மாதம் இதுவல்ல என்பதை அவர்களுக்கு புரியவைத்து, நம்முடன் சேர்ந்து அவர்களும் நன்மைகளைச் செய்யும் வகையில் அவர்களைக் கண்காணிக்கவேண்டும்.
★ வெள்ளிக் கிழமைகளில் அதிகமாக ஓதும் ஸலவாத்தினை ரமலானின் வெள்ளிக் கிழமைகளிலும் அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.
★ வெளியூரிலிருந்து நம்மைத் தேடி வரக்கூடிய மக்களுக்கோ, வீடு தேடிவரும் ஏழைகளுக்கோ, உறவினர்கள்/நண்பர்களுக்கோ நோன்பு திறக்கும் இஃப்தார் மற்றும் ஸஹர் உணவு ஏற்பாடு செய்து கொடுப்பது நன்மையான விஷயமே! ஆனால் சிலர் இஃப்தாருக்கென்றே பெரிய ஏற்பாடுகளைச் செய்து விருந்துக்கு மற்றவர்களை அழைப்பார்கள். அதற்காக அன்றைய பொழுது முழுவதும் சமையல் அறையில் அவர்கள் செலவழித்துக் கொண்டிருப்பார்கள். இது தேவையற்ற/தவிர்ந்துக் கொள்ளவேண்டிய ஒன்று! (எல்லோரும் கூடி செய்யக்கூடிய, பொது இஃப்தார் நிகழ்ச்சிகள் என்றால் அது யாருடைய அமல்களையும் வீணாக்காது)
★ தூங்கி எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும் முன் வரை ஒவ்வொரு நிலையிலும் ஓதவேண்டிய துஆக்களை அவ்வப்போது மறக்காமல் ஓதிக் கொள்ளுங்கள்.
★ நம்மால் இயன்றவரை அதிகமாக ஸதகா (தர்மம்) செய்யவேண்டும். நாம் செய்யும் தர்மம் இஸ்லாம் காட்டிய முறையில் இருக்கவேண்டும். (சிலர் ஜகாத்தும் ஸதகாவும் ஒன்று என தவறாக விளங்கி வைத்துள்ளனர். இரண்டுக்குமுள்ள வித்தியாசங்களை பார்க்கவும்.)
★ அக்கம் பக்கத்தில் கூடிப் பேசி நேரத்தைக் கழிப்பது, விவாதங்கள்/தர்க்கங்கள், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் பொழுதை ஓட்டுவது, அவசியத் தேவையின்றி இணையத்தில் நேரம் செலவழிப்பது போன்றவற்றைக் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். இயன்றவரை தொலைப்பேசியின் மூலமும்கூட வீணான பேச்சுக்களை பேசுவதைக் தவிர்ந்துக் கொள்ளவேண்டும். நோன்பின் நோக்கம் நிறைவேறும்படி நம் அமல்களை அமைத்துக் கொள்ளவேண்டும்.
★ ரமலானின் ஆரம்ப நாட்களின் இரவுகளைவிட கடைசிப் பத்து நாட்களின் இரவுகள் மிகவும் சிறப்பும், முக்கியத்துவமும் வாய்ந்ததாக இருப்பதால் இயன்றவரை இரவில் கண்விழித்து அமல்களைச் செய்ய முயற்சி செய்யவேண்டும். சில நேரங்களில் நம்மையும் மீறி தூக்கம் மேலிடும். அதுபோன்ற சமயங்களில் தையல், பின்னல் போன்ற பயனுள்ள கைவேலைப்பாடுகள் (Crafts) தெரிந்தவர்கள் அதை செய்துக் கொண்டே தூக்கத்தைக் கலைப்பதன் மூலம் தஸ்பீஹ், திக்ரு, ஸலவாத் மற்றும் கடைசிப் பத்துக்கான பிரத்யேக துஆ (“அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன், துஹிப்புல் அஃப்வ, ஃபஅஃபு அன்னீ”) போன்றவற்றை ஓதலாம்.
No Comments