ரமலான்: ஆரோக்கியத்தை பேணுக

★ உஷ்ணமான நாடுகளில் வசிப்போர் குளிர்ச்சி தரும் பொருட்களான பாதாம் பிசின், சப்ஜா விதைகள், நன்னாரி, கடல்பாசி, பனை நுங்கு போன்றவற்றை ஷர்பத்தாக செய்து அருந்த‌லாம். மற்றும் பழ வகைகள், பழ ஜூஸ்கள், மில்க் ஷேக் போன்ற ஏதாவது ஒன்றை இஃப்தார் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

★ ஸஹர் உணவுடனோ/உணவுக்குப் பிறகோ கெட்டித் தயிர் 1 கப் சுமார் (200 மில்லி) அளவு சாப்பிட்டால், இரவு கண் விழிப்பதாலும் சீதோஷ்ண நிலைகளாலும் ஏற்படும் உஷ்ணத்தை வெகுவாகக் குறைக்கும். உணவுண்ட பிறகு சாப்பிடுவது அல்சர், நெஞ்சு எரிச்சல் உள்ளவர்களுக்கு அருமருந்தாகும்.

★ குளிர்ச்சி தரும் பழங்களான தர்பூசணி, பன்னீர் திராட்சை, மங்குஸ்தான் பழம், ஆரஞ்சு, ஆத்தாப் பழம், ரம்புதான் பழம், செவ்வாழை இதுபோன்ற வகைகளில் எது கிடைக்கிறதோ அவற்றை இஃப்தார் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வெள்ளரிப் பிஞ்சு சாலட் செய்தும் சாப்பிடலாம்.

★ ஸஹர் உணவில் கடல் உணவுகளான மீன், இறால் சமைப்பவர்கள் 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொண்டால் ஸ்மெல் இருக்காது. அத்துடன் புளிக்கு பதிலாக எலுமிச்சைச் சாறு சேர்ப்பது நல்லது.

★ நிறைந்த சத்துக்களைத் தரக்கூடிய பேரீத்த பழங்களை இஃப்தாரின்போது முடிந்தவரை கண்டிப்பாக சேர்த்துக் கொள்வது நல்லது.

★ எண்ணெயில் முக்கிப் பொரிக்கும் (Deep Fry) வகை உணவுகளைக் குறைத்துக் கொண்டு அவித்த உணவுகள், கஞ்சி வகைகள் மற்றும் பழங்களை தேவைக்கு தகுந்த விகிதத்தில் சாப்பிடலாம்.

★ சஹர் நேர உணவுகளை மசாலா, எண்ணெய், நெய், காரம், புளிப்பு போன்றவை அதிகம் சேர்க்காத வகையிலும், முடிந்தவரை குறைவாகவும் சாப்பிடுவது நல்லது.

★ நோன்பு வைத்தால் விடிந்தபிறகு சிலருக்கு தலைவலி வந்துவிடும். அவர்கள் ஸஹர் உணவுக்குப் பின் ஒரு கப் சூடான டீ (பால் கலந்தோ/கலக்காமலோ) அருந்தினால் தலைவலி பெரும்பாலும் வராது. ஆரோக்கியம் தரக்கூடிய லெமன் க்ராஸ் கிரீன் டீ கூட‌ அருந்தலாம்.

About the author  ⁄ Author

No Comments

Leave a Comment