சீராய் படி ! சிகரம் தொடு!

அன்புள்ள மாணவ மாணவிகளே;

அஸ்ஸலாமு அலைக்கும்,

முழு ஆண்டுத்தேர்வை எதிர் நோக்கி பள்ளி மாணவ, மாணவிகள் எல்லோரும் தயாராகிக் கொண்டிருப்பார்கள். மதிப்பெண்களைக் கொண்டு மாணவர்களின் தரத்தை எடை போடும் கல்விச் சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பதால், மனனம் செய்து மதிப்பெண்களை அதிகம் பெற வேண்டும் என்ற முயற்சியில் ஒவ்வொரு மாணவனும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பார்கள்.

ஒரு வருடம் படிக்கின்ற படிப்பை தேர்வு என்ற பெயரில் மூன்று மணி நேரத்தில் வாந்தி எடுக்க பழக்கப்பட்டிருக்கும் மாணவர்கள், படிப்பின் முக்கியத்துவத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். தேர்வு எழுதச் செல்வதற்கு முன் கீழ் காணும் கேள்வியையும் அதற்கான பதில்களையும் மனதில் நிலை நிறுத்திச் செல்லுங்கள்.

கேள்வி :- நான் ஏன் படிக்க வேண்டும்…?

பதில் :- நான் படித்து, அந்த படிப்பின் மூலம்
* எனது மார்க்கத்திற்கும், சமூகத்திற்கும் சேவை செய்ய வேண்டும்.
* எனது படிப்பின் மூலம் என் தேசத்திற்கும், தேச உயர்விற்கும் எதையேனும் செய்ய வேண்டும்.
* எனது படிப்பின் மூலம் எனது பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

படிக்கின்ற மாணவர்கள் ஒவ்வொருவரின் எண்ணமும், நோக்கமும் “மார்க்கம், தேசம், பெற்றோர்” என்ற முக்கோணச் சூழலில் அமைந்தால் அந்த மாணவனால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

காரணம் 1:- என் பெற்றோர்

ஒரு மாணவனின் படிப்பிற்கும், அவன் உயற்விற்கும் பெற்றோர்களின் பங்கு மிக மிக அதிகம்.
நான்தான் படிக்காமல் போயிட்டேன் ஏம்புள்ள நல்லா படிக்கனும்… என்ற ஆசையிலும் , ஆர்வத்திலும் கூலி வேலை செய்தாவது உங்களின் உயர்விர்கு பாடுபடும் உங்களது பெற்றோர்களுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
இன்பங்களை மட்டுமே உங்களுக்குப் பகிர்ந்து துன்பங்களை தங்களுக்குள் சுமந்து கொண்டு, சோகங்களையும், கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு பொறுமை எனும் நிழல்களில் உங்களை நல்ல முறையில் வளர்த்து வருகின்ற உங்களது பெற்றோர்களுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விகளை உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள்.

காரணம் 2.- என் தேசம்

நம் பாரத தேசத்தின் நலனிற்கும், உயற்விற்கும் நமது முன்னோர்கள் செய்த பங்களிப்பை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவர்களுக்கு குடும்பம் இல்லாமலா இருந்திருக்கும்…? அவர்களுக்கென்று ஆசாபாசங்கள் இல்லாமலா இருந்திருக்கும்…? நமக்கு என்னென்ன ஆசைகள் இருந்ததோ… அத்தனை ஆசைகளும், உணர்வுகளும் அவர்களுக்கும் இருக்கத்தானே செய்திருக்கும் ஆனால் அத்தனையையும் அவர்கள் இழந்தது அவர்களுக்காக அல்ல…! தேசத்தின் உயற்விற்காகத்தான் என்பதை அவர்களின் வரலாறு படித்தவர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள்.
மௌலானா அபுல் கலாம் ஆஸாத், காயிதே மில்லத், கான் அப்துல் கஃபார் கான் போன்றவர்களை உதாரணமாகச் சொல்லலாம்.
தங்களின் வீடு, மனைவி, மக்கள், பணம், பதவி அனைத்தையும் நமக்காக இழந்த அந்த தேசத் தியாகிகளுக்கு நாம் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம் அல்லவா…?
அந்த நன்றியை நினைவு கூர்ந்து அவர்களைப் போன்று நானும் படித்து உயர வேண்டும் என்ற சிந்தனையுடன் படிப்பைத் தொடருங்கள் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

காரணம் 3.- என் மார்க்கம்

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான திறமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கிறான். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு “கல்வி”யை வழங்கியுள்ளான்.
உனக்கு நான் கல்வி ஞானத்தை கொடுத்தேன்! அதன் மூலம் நீ என்ன செய்தாய்? என்று மறுமை நாளில் ஒவ்வொரு மனிதனும் விசாரிக்கப்படும் போது உங்களால் என்ன பதில் சொல்ல முடியும்…?
எனவே ஒவ்வொரு மாணவனும் “எனது பெற்றோர், எனது தேசம், எனது மார்க்கம்” என ஒவ்வொன்றின் நலனுக்காக ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற வைராக்கியத்தில் படியுங்கள்…
மதிப்பெண்களோடு சேர்ந்து உங்களது மதிப்பும், மரியாதையும் உயரும் என்பதை மறந்து விடாதீர்கள்.

மேலும், தேர்வு எழுதச் செல்லும் போது சில விஷயங்களை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

♣ தேர்வுக்கு முன் எந்தப் பாடத்தை எப்போது படிக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள்.

♣ திட்டமிட்ட பாடத்தை திட்டமிட்ட நேரத்திற்குள் படித்து முடியுங்கள்.

♣ எந்த நாளில், எந்தப் பாடத்தை படிக்க வேண்டும் என்று திட்டமிடுகிறீர்களோ அதை அப்போதே செய்து விடுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் எந்த வேலையையும் ‘நாளைக்குப் பார்க்கலாம்’ என்று தள்ளிப் போடாதீர்கள்.

♣ படிப்பதை புரிந்து கொண்டு படியுங்கள் குருட்டு மனப்பாடம் செய்வதை விட்டு விடுங்கள்.

♣ தேர்வு எழுதப் போகும் முந்தைய இரவு விரைவில் தூங்கி காலையில் விரைவில் எழுங்கள்.

♣ தேர்வு எழுதப் போகும் நாள் அன்று புதிதாக எதையும் படிக்காதீர்கள் ஏற்கனவே படித்ததை மனதில் நினைவு கூறுங்கள்.

♣ திட்டமிட்டு படிக்கும் போது ஒவ்வொரு சப்ஜக்கெட்டிற்கும் சிறு “குறிப்புப் புத்தகம்” தயாரித்து, கேள்விக்கான பதில்களை சுருக்கமாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

♣ தேர்வு எழுதச் செல்லும் போது மன தைரியத்தோடு செல்லுங்கள்.

♣ தேர்வுக்குச் செல்லும் போது தேர்வுக்குத் தேவையான அனைத்தும் இருக்கிறதா? என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாதவற்றை தேர்வுக்கும், தேர்வு அறைக்கும் எடுத்துச் செல்லாதீர்கள்.

♣ தேர்வு அறையில் வினாத் தாளை வாங்கிய பின் முதலில் அதை முழுமையாகப் படித்து விட்டு பதில் எழுதத் தொடங்குங்கள்.

♣ தேர்வின் ஆரம்பத்தில் ‘நேரம் அதிகம் இருக்கிறது’ என்று நினைத்து… யோசித்து கடைசியில் நேரம் கிடைக்காமல் தெரிந்த பதிலை விட்டு விடாதீர்கள்.

♣ தேர்வு எழுதும் போது பகுதி – அ,ஆ,இ… ஒவ்வொன்றிற்கும் இவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்று தீர்மானித்துக் அதன்படி செயல்படுங்கள்.

♣ தேர்வு முடிந்த பின் அனைத்து பதில்களையும் மீண்டும் ஒரு முறை திருப்பிப் பாருங்கள்.
♣ விடைத் தாளில் அடித்தல், திருத்தல் இல்லாமலிருப்பது மிக நல்லது.

ஒருவனுக்கு வெற்றியை கொடுப்பது அல்லாஹ்தான் எனவே தேர்வு எழுதச் செல்வதற்கு முன் இரண்டு ரகஅத் நஃபில் தொழுது விட்டு,
“யா அல்லாஹ்! எனது படிப்பின் மூலம் எனது பெற்றோர்களுக்கும், எனது தேசத்திற்கும், எனது மார்க்கத்தின் உயர்விற்கும், நலனிற்கும் உழைக்கும் ஒருவனாக என்னையும் தேர்ந்தெடுத்துக் கொள்”

என்று மனமுருகி, இருகரமேந்தி பிரார்த்தி விட்டு எழுதச் செல்லுங்கள் வெற்றி நிச்சயம்…..

வாழ்த்துக்களுடன்..

PDV GULF SOCIAL SERVICE ASSOCIATION.

About the author  ⁄ Author

No Comments

Leave a Comment