ஜப்பான்-கல்லறையில் கூட QR CODE !

கல்லறையில் கூட QR CODE !-QUICK REFERENCE CODE

டிபார்ட்மென்டல் ஸ்டோர் களில் பாக்கெட்களை சர்சர் ரென்று ஒரு கருவி முன்பு காட்டி, கணினியில் பில் போடுவதைப் பார்த்திருப்பீர்கள். அந்த பாக்கெட்களில் ‘பார் கோடு’ எனப்படும் கருப்புக் கோடுகள் வெள்ளைப் பின்னணியில் இருக்கும்.

அந்தக் கோடுகளை ஸ்கேன் செய்யும் ஸ்கேனர் கருவி, அது என்ன பொருள், உற்பத்தியாளர் யார், அதன் விலை என்ன என்பதைக் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டுபிடித்து கணினிக்கு அனுப்புகிறது. இதனால் பில் போட ஆகும் நேரம் குறைகிறது. மனித சறுக்கல்களால் நிகழ வாய்ப்புள்ள தவறுகள் ஏற்படுவதில்லை. இந்த பார் கோடை அச்சுப் புத்தகங்களின் பின்பும் நீங்கள் பார்க்கலாம். அதற்கு ஐ.எஸ்.பி.என் கோடு என்று பெயர்.

ஜப்பான் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு
இந்த பார் கோடு, ஒற்றைப் பரிமாணம் கொண்டது. இதில் அதிக விஷயங்களைச் சேர்க்க முடியாது. மேலும் மேலும் தகவல்கள் வேண்டும் என்ற நிலை ஆட்டோமொபைல் வாகன உற்பத்தித் துறைக்கு ஏற்பட்டது. அவர்கள் பல ஆயிரம் உதிரி பாகங்களைக் கொண்டு ஒரு வண்டியை உருவாக்குகிறார்கள். சரியான பாகம் சரியான இடத்தில் இணைக்கப்படவேண்டும். அதற்காக என்று பிரத்தியேகமாக ஜப்பானிய நிறுவனமான டென்ஸோ கார்ப்பொரேஷன் உருவாக்கியதுதான் கியூ.ஆர்.கோடு – குவிக் ரெஸ்பான்ஸ் கோடு. அதாவது, உடனடியாக தகவல் வழிகாட்டுதலை அறிந்து முடிவுகளை எடுக்க உதவும் சங்கேத மொழி.

பெரிய சதுரம்.. சின்ன சதுரங்கள்
இந்த கியூ.ஆர்.கோடு இரு பரிமாணங்கள் கொண்டது. ஒரு பெரிய சதுரத்தில் பல்வேறு சிறு சிறு உள் சதுரங்கள். அவை ஒவ்வொன்றும் வெள்ளையாக அல்லது கருப்பாக இருக்கலாம். நமக்கு வேண்டிய தகவல்களை இப்படிக் கருப்பு வெள்ளைச் சதுரங்களாக மாற்றிவிடுவதுதான் கியூ.ஆர்.கோடு. இதை கியூ.ஆர்.கோடு ஸ்கேனரைக் கொண்டு ஸ்கேன் செய்தால், அந்த சதுரத்தில் என்ன தகவல் உள்ளது என்பதைக் காட்டிவிடும்.

ஸ்கேனர் தேவையில்லை.. ‘செல்’ போதும்
ஆட்டோமொபைல் துறைக்காக என்று உருவாக்கப்பட்டாலும் நாள டைவில் பல்வேறு துறைகளுக்கும் இந்த கியூ.ஆர்.கோடு நகரத் தொடங்கியது. கேமரா வைத்த செல்பேசிகள் வந்த பிறகு, கியூ.ஆர்.கோடு படிப்பதற்கு என்று பிரத்தியேக ஸ்கேனர்கள்கூட தேவையில்லாமல் போய்விட்டன. கியூ.ஆர்.கோடு நோக்கி உங்கள் செல்பேசி கேமராவைக் காட்டினால் போதும்.. உங்கள் செல்பேசியில் உள்ள குறுஞ்செயலி, அதில் உள்ள தகவலை உங்கள் திரையில் காட்டிவிடும்.

கியூ.ஆர்.கோடில் எண்கள், எழுத்துகள், இணையதள முகவரிகள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். உங்கள் விசிட்டிங் கார்டில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் எளிதாக ஒரு கியூ.ஆர்.கோடில் கொடுத்து விடலாம். கியூ.ஆர்.கோடு இன்று பல துறைகளிலும் பயன்படுத்தப் படுகிறது. மிகப் பெரிய பயன்பாடு விளம்பரத் துறையில்தான்.

இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்ததும், அச்சு மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் அதோடு தொடர்புடைய இணையதள முகவரிகளைச் சேர்த்தார்கள். ஆனால் அந்த முகவரியை துல்லியமாக ஞாபகம் வைத்துக் கொண்டு, கணினியில் உட்கார்ந்து அதை டைப் செய்து, அந்த இணைய தளத்துக்கு போய் பார்த்தவர்கள் எண்ணிக்கை சொற்பமே.

போட்டோ எடுப்பதுபோல…

கியூ.ஆர்.கோடு வந்த பிறகு, அந்த அவஸ்தைகள் இல்லை. இணைய இணைப்பு கொண்ட கேமரா செல்பேசிகளுக்கான ‘கியூ ஆர் ஸ்கேனர்’ என்ற அப்ளிகே ஷனை எளிதில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி கியூ.ஆர்.கோடு கருப்பு வெள்ளைச் சதுரங்களை உங்களது இணைய இணைப்பு செல்பேசியால் போட்டோ எடுப்பதுபோல ஒருமுறை ஸ்கேன் செய்தால் போதும், சரியான இணையப் பக்கத்துக்குப் போய்விடலாம். இணைய தள முகவரிகளை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. முகவரிகளை டைப் செய்ய வேண் டிய அவசியம் இல்லை. அதுதான் இதன் ஆகப் பெரிய வசதி.

பத்திரிகை விளம்பரங்களில் உள்ள கியூ.ஆர்.கோடை உங்கள் செல்போனால் ஸ்கேன் செய்தால், இணையத்தில் அதை வாங்கும் தளத்துக்கு நேராகச் சென்று விடலாம். அருங்காட்சி யகங்களில் உள்ள அரிய பொருள் களின்கீழ் இருக்கும் கியூ.ஆர். கோடை உங்கள் செல்பேசியால் ஸ்கேன் செய்தால், அந்தப் பொருளைப் பற்றிய முழுமையான தகவல், ஒலிப்பதிவு ஆகியவற்றை உங்கள் செல்பேசியில் பார்க்கலாம், கேட்கலாம்.

கடைசி வரை கியூ.ஆர்.கோடு
ஜப்பானில் கல்லறைகள் மீதுகூட கியூ.ஆர்.கோடு பதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதன் மூலம், கல்லறையில் துயில்பவரின் வாழ்க்கை விவரம் அடங்கிய இணையப் பக்கத்துக்கு நேரடியாகச் சென்றுவிட முடியும்.

கியூ.ஆர்.கோடில் கொஞ்சம் அழிந்துபோனாலும் அடிப்படைத் தகவல்கள் சிலவற்றையாவது மீட்க முடியும். பார் கோடில் அப்படி முடியாது. கியூ.ஆர்.கோடின் பயன்களை நாம் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. வரும் காலத்தில் ஒவ்வொரு வர்த்தக நிறுவனமும், தொண்டு நிறுவனமும், ஏன் ஒவ்வொரு மனிதருமே தங்களைப் பற்றிய தகவல்கள் கொண்ட இணையதள முகவரி பொதிந்த கியூ.ஆர்.கோடு ஏந்தியபடி அலையப்போகிறார்கள்!

About the author  ⁄ Author

No Comments

Leave a Comment