இஸ்லாத்தின் பெயரிலான வன்முறைகள்..

சமகால உலகில் சில குழுக்கள் தமக்கு இஸ்லாமியப் பெயர்களை சூட்டிக் கொண்டு வன்முறை களில் ஈடுபட்டு வருவது உலகம் அறிந்த உண்மையாகும். இந்த இயக்கங்கள் குறித்து மீடியாக்களில் பரவலாக்கப்படும்

போது இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. எனவே, இத்தகைய குழுக்களது நடவடிக்கைகளைப் பற்றிய சரியான புரிதல் எல்லோருக்கும் அவசியப்படுகிறது.

இஸ்லாத்தின் அங்கீகாரமின்மை
இஸ்லாத்தை உரிய முறையில் பின்பற்றும் ஒருவர் சமூக மாற்றத்துக்கான வழிமுறையாக பலாத்காரத்தையோ வன்முறைகளையோ கையாள முடியாது.

“மார்க்கத்தில் பலாத்காரமில்லை” (2: 256) “மனிதர்கள் விசுவாசிகளாக மாறுவதற்கு நீர் அவர்களை நிர்ப்பந்திக்கிறீரா?” (10:99) “நீர் அவர்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவராக இல்லை”(88:22) போன்ற வசனங்கள் பலாத்காரத்தைக் கண்டிக்கின்றன. இஸ்லாம் என்ற மார்க்கத்தோடு வாழ்பவர் அத்துமீறல்களோடும் வன்முறைகளோடும் சம்பந்தப்படமாட்டார். இஸ்லாம் என்றால் ‘சாந்தி, ‘சமாதானம்’ (ஸில்ம்) என்ற பொருளைத் தருகிறது. எனவேதான் அல்லாஹ் “நீங்கள் ‘ஸில்ம்’ க்குள் முழுமையாக நுழைந்து விடுங்கள்” (2:208) என்கிறான்.

முஸ்லிம் என்பவன் அன்பு, இரக்கம், சாந்தி, சமாதானம், மென்மை, தர்மம் என்பவற்றை உலக மனிதர்களுக்கு அக்கறையோடு சுமந்து வரும் ஒரு தூதுவன் தான். எனவே, பிறரை அவன் சந்திக்கின்ற போது கூட “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்” (அஸ்ஸலாமு அலைக்கும்) என்ற வாழ்த்தைக் கூறுவான். இஸ்லாமியப் பிரச்சாரம் கூட ‘ஹிக்மா’ (ஞானம்-16:125) ‘பஸீரா’ (அறிவுத்தெளிவு 12:108) ‘ஜிதால் பில் அஹ்ஸன்’ (மிகவும் அழகிய விதத்தில் கருத்துக்களை பறிமாறுவது-16:125) ‘கவ்லன் லய்யின்’ (மிருதுவான பேச்சு 20:44) என்பவற்றின் மூலமே இடம்பெற வேண்டுமென்று அல்குர்ஆனிலே அல்லாஹ் சொல்கிறான்.

ஆனால், உலகில் சட்டத்தையும் ஒழுங்கையும் சமூக நீதியையும் கட்டிக்காப்பதற்கு, கொலைத் தண்டனையை இஸ்லாம் அமுலாக்கினாலும் அதற்கு இறுக்கமான கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் போட்டிருக்கிறது. கொலைக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவன் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுவதற்கும் மன்னிக்கப்படுவதற்கும் ஏராளமான வாய்ப்புகளையும் தூண்டுதல்களையும் அது வழங்குகின்றது. அது மட்டுமன்றி, குற்றத்தை நிறுவுவதற்கு பலமான ஆதாரங்களும் சாட்சியங்களும் இருக்க வேண்டும். “அவர்களை நீர் மன்னித்து, தாராளத் தன்மையோடு நடந்து கொள்வீராக” (5:13) என அல்லாஹ் கூறுகிறான்.

பழிக்குப் பழி வாங்குவதற்கான உரிமையை பாதிக்கப்பட்டவருக்கோ அல்லது அவரது உறவினர்களுக்கோ அவன் வழங்குகிறான். ஆனால், அதேவேளை மன்னிகும்படியும் ஊக்குவிக்கிறான். பழிக்குப்பழி வாங்கும் போது அத்துமீறப்பட்ட அளவுக்கே அத்துமீறியவரைத் தண்டிக்கலாம் என்றும் அளவு கடந்து தண்டிப்பது கடும் தண்டனையை பெற்றுத்தருமென்றும் அவன் கூறுகின்றான். இது பற்றி சூரா பகராவின் 178 ஆம் வசனம் மிகத் தெளிவாக விவரிக்கிறது.

இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போட்டு அதற்கு அச்சுறுத்தலாக அமைவது, முஸ்லிம் சமூகத்தை ஒழித்துக் கட்டுவதற்காக முழுமூச்சாக செயல்படுவது, பலவீனர்கள் மீது அராஜகத்தை கட்டவிழ்த்து விடுவது போன்றவற்றில் ஈடுபடுபவர்களைத் தடுத்து நிறுத்த இஸ்லாம் ஆயுதப் போராட்டத்தை ஒரு வழிமுறையாக அங்கீகரிக்கிறது. மட்டுமன்றி, அதனை கட்டாயப்படுத்துகிறது.

ஆனால், இதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளையே போட்டிருக்கிறது. ஒருவர் மற்றொருவரை எவ்வித நியாயமும் இன்றி கொலை செய்வதானது முழு மனித சமுதாயத்தையும் கொலை செய்வதற்குச் சமமாகும் என்றும் அதேவேளை ஒருவரது உயிரைப் பாதுகாப்பது முழு மனித சமுதாயத்தையும் பாதுகாப்பதற்குச் சமம் என்ற கருத்தையும் குர்¬ஆனில் (5:32)

அல்லாஹ் தெரிவிப்பதிலிருந்து ஒரு மனிதன் – அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனது உயிரைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்துகிறான். “(இஸ்லாமிய அரசுடன்) உடன்படிக்கை செய்துள்ள (முஸ்லிம் அல்லாத நாட்ட) வரைக் கொலை செய்பவன் மறுமையில் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமாட்டான்” (ஆதாரம்-புகாரி) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும் நபியவர்கள் : “இஸ்லாமிய அரசின் பாதுகாப்பிலுள்ள முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு யாராவது அநியாயம் செய்தால் அல்லது அவரது உரிமை ஒன்றை குறைத்து விட்டால் அல்லது அவரது சக்திக்கு மேல் அவரை நிர்பந்தித்தால் அல்லது அவரது விருப்பமின்றி அவரிடமிருந்து ஏதாவது ஒன்றை எடுத்தால் மறுமையில் நான் அவருக்கெதிராக வாதாடுவேன்” என்றும் கூறினார்கள். (ஆதாரம்-அபூதாவுத்,பைஹகி)

மனித உயிர்களின் மீது அத்துமீறுவது மட்டுமல்ல மிருகங்களது உயிர்கள் மீதும் உடல்கள் மீதும் அத்துமீறுவது கூட ஒரு விசுவாசியை நரகில் நுழைவிக்கும் குற்றமாகும். ஒரு பெண் பூனை ஒன்றைக் கட்டி வைத்து உணவு கொடுக்காத காரணத்தால் நரகம் நுழைந்தாள் என்றும், தாகத்தோடு இருந்த நாய்க்கு நீர்புகட்டிய நடத்தை கெட்ட ஒரு பெண் மன்னிக்கப்பட் டாள் என்றும் கூறும் நபிமொழிகள் இஸ்லாத்தின் ஜீவகாருன்யக் கோட்பாட்டை உயர்ந்த குரலில் ஒலிக்கச் செய்கின்றன.

இஸ்லாமிய யுத்த தர்மம்
முதலில் நாம் குறிப்பிட்டது போல் இஸ்லாம் ஆயுதப் போரை பல நியாயமான காரணங்களுக்காக அங்கீகரித்தாலும் யுத்தத்தின் போது முஸ்லிம் போர் வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அழகிய ஒழுங்குகளை அது வகுத்துத் தந்திருக்கிறது. எதிரிகள் போரைத் தூண்டும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது ஊர்ஜிதமாக வேண்டும், தனிப்பட்ட குரோதங்கள், இனவாதம், தேசியவாதம், மொழிவாதம் போன்றவை போருக்குக் காரணமாக அமையக் கூடாது, யுத்தத்தின் போது பெண்கள், வயோதிகர்கள், சிறுவர்கள், மதபோதகர்கள், போராட்டக் களத்திற்கு வராத, போரை விரும்பாதவர்கள் போன்றோர் கொல்லப்படக் கூடாது, பழம் தரும் மரங்கள் வெட்டப்படலாகாது போன்றவை இஸ்லாமியப் போர் தர்மத்தின் சில விதிமுறைகளாகும்.

மேலும் இஸ்லாமிய வரலாற்றில் கைதிகள் மிகவும் மரியாதையாகவே நடத்தப்பட்டுள்ளனர். நபி (ஸல்) அவர்கள் தெளிவாகவே கூறியிருக்கின்றார்கள் “போராடுங்கள். வரம்பு மீறாதீர்கள். துரோகம் செய்யாதீர்கள். சித்ரவதை செய்யாதீர்கள். சிறுவர்களைக் கொலை செய்யாதீர்கள்.”(ஸஹீஹ் முஸ்லிம் 3261) என்றார்கள். இந்த அழகிய பண்பாட்டை கவனித்த விளங்கிய பலர் தாமாக முன் வந்து இஸ்லாத்தைத் தழுவிய சந்தர்ப்பங்கள் அதிகமாகும்.

கைபர் யுத்தத்தின் போது யூதர்களின் வேதமான தௌராத்தின் பிரதியொன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை பத்திரமாகக் கொண்டு போய் யூதர்களிடம் ஒப்படைக்கும் படி நபிகளார் தமது தோழர்களைப் பணித்தார்கள். இதிலிருந்து பிற சமுதாயத்தவரது உயிர், உடமை, மதம் ஆகியவற்றை யுத்த சமயத்தில் கூட நபிகளார் பாதுகாத்தார்கள்.

மேற்குலக ஊடகங்களின் பித்தலாட்டம்.
அதேவேளை, இஸ்லாமிய உலகில் நடைபெறும் சின்னச் சின்ன குற்றச்செயல்ளையும் பூதக்கண்ணாடி போட்டு பார்ப்பதையும் இல்லாதவற்றை இருப்பதாக சித்தரிப்பதையும் ஊடகக் கொள்கையாகக் கடைப்பிடிக்கும் மேற்குலக சார்பு ஊடகங்கள் இஸ்லாமிய உலக விவகாரங்களை திரித்துக் கூறுவதிலும் தப்பான கருத்துக்களை உருவாக்குவதிலும் வரிந்துகட்டிக் கொண்டு செயல்படுகின்றன. மேற்குலகில் இடம்பெறும் சமுகவிரோத செயல்கள் மூடிமறைக்கப்படுகின்றன.

முதலாம் உலக யுத்தத்தின் போது ஒரு கோடி எழுபது லட்சம் பேரும் இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஆறு கோடிப் பேரும் கொல்லப்பட்டார்கள். அங்கவீனமானவர்கள், ஏற்பட்ட பொருட்சேதங்கள் தனியானவவை. மேற்குலகு புரிந்த இந்த அட்டூழியங்களை வார்த்தைகளில் வடிக்க இயலாது. குவண்டனாமா, இராக் சிறைகளில் முஸ்லிம் கைதிகள் மீது அமெரிக்க இராணுவம் புரிந்த, புரியும் அடாவடித்தனங்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களால் கூட வன்மையாகக் கண்டிக்கப்பட்டுவருகின்றன. பலஸ்தீனர்களை இஸ்ரேல் நடத்தும் விதத்தை மேற்குலக ஊடகங்கள் மிகக் குறைவாகவே கண்டுகொள்கின்றன, அல்லது அவற்றை நியாயப்படுத்துகின்றன.

எனவே, இஸ்லாமியப் பெயர் தாங்கிய தீவிரவாதிகள் புரியும் குற்றச் செயல்களை கண்டிக்கும் அதே வேகத்தில் இந்த ஊடகங்கள் மேற்குலக பயங்கரவாதத்தையும் கண்டிக்குமாயின் அதனை வரவேற்க முடியும். மொத்தத்தில் இஸ்லாமிய உலகு பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் அவற்றுக்கில்லை. அராஜக ஆட்சியாளர்கள்
அதேவேளை, இஸ்லாமிய உலகில் நடுநிலை தவறிய தீவிரவாதக் குழுக்கள் உருவாகுவதற்கு பல நியாயமான காரணங்களும் இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. மேற்கத்திய நாடுகளது அடிவருடிகளாக இருந்த வண்ணம் குடிமக்களது அடிப்படை மனித உரிமைகளைக் கூட வழங்காமல் அராஜக ஆட்சி நடத்தும் அரபுலக ஆட்சியாளர்கள் இத்தகைய தீவிரவாதக் குழுக்களது உருவாக்கத்திற்கு பல வகையிலும் காரணமாக அமைந்திருக்கிறார்கள்.

எனவே, இந்த அடக்குமுறைகளது எதிர் விளைவாக இத்தகைய குழுக்கள் தோன்றுகின்றன. ஒரு பந்தை சுவரில் வேகமாக வீசி எறியும் போது அது அதே வேகத்தில் எறிபவரது திசையை நோக்கியே திரும்பிவருவது உலக நியதியாகும். அதுபோலவே அரபுலக ‘அரச பயங்கரவாதம்’ பொது மக்களில் பலருக்கு வேப்பங்காயாகக் கசந்து, அது வன்முறைகளின் பால் அவர்களில் சிலரை இட்டுச்செல்கி¬றது. நாம் இவ்வாறு கூறும் போது பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதாக எவரும் கருதி விடக்கூடாது. பொறுமையானது கடுமையாக சோதிக்கப்படும்போது அது தீப்பிழம்பாக வெடித்துச் சிதறிவிடும்.

அரபுலகில் உள்ள ஆட்சியாளர்களில் பலரை மேற்கத்திய நாடுகள் தமது கைப்பொம்மைகளாக வைத்து இயக்கிக் கொண்டிருக்கின்றன. அரபுலகில் உள்ள பெட்ரோல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீது பூரண ஆதிக்கம் செலுத்த வேண்டுமாயின் எதற்கும் இசைந்து கொடுக்கும் ஆட்சியாளர்களை அதற்காகப் பாதுகாத்து வளர்ப்பதும் அவர்களது ஆட்சிகளை தக்கவைக்க தன்னாலான சகலதையும் செய்வதும் மேற்குலக நலன்களின் தேவையாக மாறியுள்ளது.
அரபு நாட்டு ஆட்சியாளர்களும் தமது இராணுவ மற்றும் பண பலத்தின் உதவியுடன் குடிமக்களது இரத்தங்களை உறிஞ்சிக் குடிக்கும் ஒட்டுண்ணிகளாக இருக்கின்றனர். அதேவேளை, உலகெங்கும் பரவலாக ஏற்பட்டு வரும் இஸ்லாமிய எழுச்சிகளால் தமது ஆட்சி பறிபோய்விடும் என்ற பயத்தால் தத்தமது நாடுகளில் இஸ்லாமியவாதிகள் தலைதூக்கும் போதெல்லாம் அவர்களுக்கு மரண அடிகொடுத்து சுயபாதுகாப்புக்கு வேலிபோட்டுக் கொள்கிறார்கள்.

மேற்குலகத்தின் கபட நாடகம்
மேற்குலக நாடுகளுக்கு இத்தகைய ஆட்சியாளர்களே தேவைப்படுகிறார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு தத்தமது நாடுகளில் இஸ்லாமிய நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு இல்லாமல் போகின்ற போது, அடிக்கடி சிறைகளில் பலர் தள்ளப்படும் போது, சர்வசாதாரணமாகவே மரண தண்டனைகள் அரங்கேற்றப்படும் போது உள்ளம் வெதும்பும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதத்தினை கையிலெடுத்துப் போராட முனைகிறார்கள்.

விசித்திரம் என்னவென்றால் தமக்கு வேண்டிய ஆட்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கும் மேற்குலகம்தான் அந்த ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடும் ஆயுதக் குழுக்களுக்கும் ஆயுத விற்பனை செய்கின்றது. ஒரு காலத்தில் சதாம் ஹுஸைனைப் பலப்படுத்த ஆயுதம் கொடுத்த அமெரிக்காதான் ஆஃப்கானில் கம்யூனிஸ சார்பு ஆட்சியை வீழ்த்தி ரஷ்யாவை துரத்த உயிர்களைத் தியாகம் செய்து போராடிய முஜாஹித்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பைக் கொடுத்தது. ரஷ்யா துரத்தப்பட்ட பின்னர் முஜாஹித்கள் ஆட்சியமைத்த மறுகணமே அவர்கள் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்படவும் ஏற்பாடுகளைச் செய்தது.

அந்தவகையில் அரபுலக ஆட்சியாளர்கள் மட்டுமன்றி அப்பிராந்தியங்களில் போராடும் பல தீவிரவாத குழுக்களும் கூட மேற்கிலிருந்து ஆயுதம் பெறுவது விநோதத்திலும் விநோதமாகும். ஒரு காலத்தில் இலங்கையின் அரசுப் படைகளுக்கு இஸ்ரேல் ஆயுதப் பயிற்சி வழங்கியது. அதேவேளை வடக்கில் அரசுக்கு எதிராகப் போராடிய தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் யுத்தப்பயிற்சி வழங்கியது என்றால் இந்த நாடகத்தின் பின் புலத்தை புரிவது கஷ்டமல்ல.

சுருங்கக் கூறின் மேற்குலகுக்குத் தேவைப்படுவது மூன்று விசயங்கள் மாத்திரமே.

1. உலகில் வேகமாக ஏற்பட்டு வரும் நடுநிலையான இஸ்லாமிய எழுச்சியை முற்று முழுதாகத் தடுத்து நிறுத்துவது.
2. அரபுலகின் பெட்ரோலிய வளத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது.
3. மேற்குலகில் இருக்கும் ஆயுத உற்பத்திச் சாலைகளுக்கு நிரந்தரமாக ஆயுதச் சந்தைகளை தக்க வைத்துக் கொள்வது.
மேற்கண்ட மூன்று நோக்கங்களையும் அடைந்து கொள்வதற்காக உலகில் எந்தப்¬ பாதகத்¬தையும் செய்வதற்கு மேற்குலகு தயங்கப் போவதில்லை.
இந்த உண்மையை அரபுலக ஆட்சியா¬ளர்¬களும் தீவிரவாத பயங்கரவாத ஆயுதக்குழுக்களும் புரியும் காலம் முதலில் பிறக்க வேண்டும். அதுமட்டு மின்றி தம்மைத் தூண்டுவோர் யார்? அவர்களது உள்நோக்கம் என்ன?

தாம் சார்ந்திருக்கும் இஸ்லாத்தின் மிகச் சரியான போதனைகள் யாவை? தாம் போராடும் வழிமுறைகள் சரியானவையா? போன்ற தெளிவுகள் அனைவருக்கும் அவசியம் தேவைப்படுகின்றன.
மிதவாதம் தேவைதற்கால உலகில் நடுநிலையில் நின்று இஸ்லாத்தைப் பேசும், எழுதும், நடைமுறைப்படுத்தும் இஸ்லாமிய அறிஞர்களுக்கு இத்தகைய அரபு நாட்டு ஆட்சியாளர்கள் பற்றியும் அவர்கள் செய்யும் பிழைகளை எதிர்ப்பதற்கும் அவற்றைக் களைவதற்கும் தேவையான ஆலோசனைகள் அதிகம் தேவைப்படுகிறது.

‘கடும் முறுக்கு தெறிக்கும்’ என்பது போல் தீவிரவாதம் ஒரு போதும் நீடித்து நிலைத்த நற்பலன்களைத் தரப்போவதில்லை. ஆயுதத்தால் பெறப்படும் வெற்றிகளுக்கு ஆயுள் குறைவு. மனதில் புகுந்து, ஆத்மாவைத்¬ தொட்டு, அறிவுப்பூர்வமாகச் செய்யப்படும் பிரச்சார உத்திகள் மாத்திரமே நீடித்து நிலைக்கும். நாய் நம்மைக் கடிக்கிறது என்பதற்காக நாமும் நாயைக் கடிக்க முடியாது.

‘முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்’ என்ற முதுமொழி எல்லா இடங்களுக்கும் பொருந்தாது. அடிப்படையில் இஸ்லாம் ஆயுதப் போரில் தங்கியிருக்கவில்லை. ‘இதற்கு மேல் சகிப்பதில் அர்த்தமில்லை’ என்ற கட்டத்தை அடையும் பட்சத்தில் மட்டுமே அது மிகுந்த கட்டுப்பாடுகளோடு ஆயுதத்தை பிரயோகிக்க அனுமதிக்கிறது. இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் கூட பல கட்டங்களைக் கடந்த பின்னரே அமுலாக்கப்படுகின்றன. அவற்றிற் சில வருமாறு :-

1. மனப்பக்குவம் உருவாக்கப்பட்டிருப்பது
2. குற்றங்கள் நிகழாமல் இருப்பதற்கான சூழல் இருப்பது
3. தீமைகளுக்கான வாயில்கள் உயர்ந்தபட்சம் மூடப்பட்டிருப்பது
4.இஸ்லாத்தினை கொள்கையாக ஏற்று அமுல்படுத்தும் இஸ்லாமிய அரசு இருப்பது
5.முன்மாதிரியான கலீபா இருப்பது

இதுபோன்ற பல நிபந்தனைகள் இருந்தால் தான் குற்றவியல் தண்டனைகளைக் கூட அமுலாக்க முடியும். அப்படியில்லாமல் நினைத்த மாத்திரத்தில் தண்டனைகளை அமுலாக்கப் போனால் மார்க்கத்தில் மனோ இச்சைக்கு இடமளித்த குற்றத்திற்கு நாம் ஆளாக நேரிடும். அத்துடன் இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயம் தான் உலக மக்களுக்கு ஏற்படும்.

எனவே, இஸ்¬லாத்-துக்குள் தீவிரவாதத்தை நுழைத்து வன்முறைகளில் ஈடுபடுவோர் இந்நிலையிலிருந்து விடுபடுவதற்கு இஸ்லாமிய உலகிலுள்ள நடுநிலையான இஸ்லாமிய அறிஞர்களது புத்திமதிகளையும் அறிவுரைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் அது இஸ்லாத்துக்கு அவப்பெயரை தேடித்தருவதோடு முஸ்லிம் சமூகத்தையும் பேராபத்துக்கு உள்ளாக்கும். முஸ்லிம் விரோத சக்திகளது போக்குகளிலும் அது எண்ணெய் ஊற்றுவதாக அமையும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனது மார்க்கத்தை உரியமுறையில் புரிந்து நடைமுறைப்படுத்தும் மனப்பக்குவத்தையும் வாய்ப்பையும் வழங்குவானாக!

About the author  ⁄ Author

No Comments

Leave a Comment