குர்பானி உயிர் வதையல்ல!

நாட்கள் நகர நகர மீண்டும் மலரவிருக்கிறது தியாகத் திருநாளென்றொரு மற்றொரு பண்டிகை. ஹஜ் எனும் புனித ஆலய தரிசனமும், குர்பான் எனும் ஆடு, மாடு, ஒட்டக அறுப்பும் இந்நாட்களில் மிகமுக்கியமானவை.

வசதி படைத்த எந்த ஒருவரும் வாழ்நாளில் ஒருமுறையேனும் க அபா எனும் இறை ஆலயத்திற்கு சென்று வர தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வையகத்தில் வாழும் காலங்களில் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் இறைவிசுவாசம் கொண்டு தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற இதர முக்கிய கடமைகளைச் செய்து முகம் மலர்ந்திருக்கிற வேளையில், மக்கா, மதீனா சென்று புனிதமான மஸ்ஜிதுல் ஹரமையும், மஸ்ஜிதுன் நபவியையும் நேருக்கு நேர் கண் கூடாக கண்ணெதிரில் பார்க்கும் போது உண்டாகும் ஆனந்தம் அதை வெற்று வார்த்தைகளால் விளக்கி கூறிவிட முடியாது.

இந்த ஹஜ் பயணம் என்பது ஏதோ ஒரு நாட்டுக்கு சுற்றுப் பயணம் சென்று வருவது போன்றது அல்ல! அதற்கென்று வழிமுறையும், வழிபாட்டு முறையும் இருக்கிறது. அதில் தவறு நிகழ்ந்தால் குற்றப் பரிகாரங்களும் உண்டு. இதிலிருந்தே இப்பயணத்தின் முக்கியத்துவம் குறித்து புரிந்து கொள்ள முடியும். இது அல்லாமல் “ஹஜ் எனும் இப்புனிதப் பயணத்தை மேற்கொண்டு ஊர் திரும்பும் ஒருவர் அன்று பிறந்த பாலகனைப் போல் (குற்றமற்றவராக) ஆவார்.” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும்.

தனது குடும்பம், தொழில், வசதி என யாவற்றையும் எங்கோ ஒரு மூலையில் தூக்கி வைத்து விட்டு ஒற்றை வண்ண நிற மண்ணறை ஆடையுடன் ஆட்டம் பாட்டம் எதுவுமின்றி பேரமைதியுடன் ஒருவன் இப்பாருலைகைப் படைத்த அல்லாஹ்வை, அவனது ஆற்றலை நினைத்து நினைத்து அல்லாஹ்வின் இல்லத்தை இடப்புறமாகவும், வலப்புறமாகவும் வலம் வரும் ஒரு முஸ்லிம் மெய்யாகவே அல்லாஹ்வுக்கு மட்டும் அடிமைப்பட்டுப் போகிறான்.

இது புறமிருக்க ஹஜ் பயணம் மேற்கொள்ளாத மக்கள் ஆங்காங்கே ஊர் தோறும் இறைவனுக்காக முப்பிராணிகளில் ஒன்றை முழு மனதுடன் “குர்பானி” கொடுப்பார்கள். இது நடைமுறையில் கொடுக்கப்படும் பலி போன்றதல்ல! இதனாலேயே குர்பானியின் நோக்கம் குறித்து அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்:
(பலிப்பிராணிகளாகிய) அவற்றின் இறைச்சிகளோ, ரத்தங்களோ அல்லாஹ்வைச் சென்றடைவதில்லை: மாறாக, உங்களிடம் உள்ள இறையச்சம்தான் அவனைச் சென்றடையும். (22:37)

இறை பக்தி, இறையச்சம் என்பதெல்லாம் மனவெளிப்படுதானே அதற்காக உயிர் வதை தேவையா? என்றொரு கேள்வி பொதுவாக கேட்கப்படுவதுண்டு. நமது நாவுகள் தேடும் சுவை இனிப்புதான் என்றாலும் அதற்கு நாம் சர்க்கரையை மட்டும் கொட்டிக் கொட்டி ருசியாற்றுவதில்லை. லட்டு, ஜிலேபி, மைசூர் பாகு என்று வகைவகையான பல்வேறு வர்ணங்களில், வடிவங்களில் தேடித்தேடி அலைவதேன்..?

ஐம்பெரும் கடமைகளுக்கு தக்வா என்னும் இறையச்சம் அசலாக இருந்தாலும் அக்கடமைகளின் வடிவங்கள் வேறு வேறு. இவ்வகையில்தான் குர்பானி, தியாகம், அர்ப்பணிப்பு, பாசப்பற்றின்மை என்பன போன்ற குணங்களின் குறியீடாக உழ்ஹிய்யா எனும் குர்பானி அமைகிறது.

நின்று நிதானித்து யோசித்துப் பார்க்கையில் இதில் புறத் தோற்றம் உயிர் வதை போல காட்சியளித்தாலும் அகத் தோற்றத்தை அகழ்ந்து பார்க்கின்ற போது ஜீவகாருண்யமே அதில் வெளிப்படுவதைக் காண முடியும். ஆடு மாடுகளை அறுக்காமல் விட்டு விட்டால் இப்பிரபஞ்சத்தின் சமநிலை சீர் குலைந்து போகும். அனுதினமும் ஆடு, மாடுகள் ஆயிரக்கணக்கில் அறுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறன. அதனால் அந்த இனங்கள் அருகிப் போய் விட்டதா என்ன..?

குர்பானி இறைச்சி ஏழை எளிய மக்களுக்கு பங்கீடு செய்யப்படுகிறது. அதனது தோல் பதப்படுத்தப்பட்டு , பயன்படுத்தப்படுகிறது. அதனது எலும்புகளும், கொம்புகளும் கூட வீணாக்க்கபடுவதில்லை. உலக உயிர்கள் யாவும் மனிதனின் வாழ்க்கை தேவைகளுக்கு உதவும்படித்தான் உலவிக் கொண்டிருக்கிறது.

அன்றாடம் நாம் அடித்துக் கொல்லும் கொசு, மூட்டைப் பூச்சி, கரப்பான் பூச்சி, எறும்பு, பல்லி, குளவி, பாம்பு, பூரான், தேள் என்று எத்தனை எத்தனை வன்முறை, மென்முறைக் கொலைகள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடைபெற்றே வருகிறது. இந்த மிருகங்களுக்கு உயிர் இல்லையா? அவைகளைக் கொல்வது ஜீவகாருண்யம் சாகடிக்காதா? உயிர்களில் என்ன ஏற்றத் தாழ்வு? யோசிக்க வேண்டும்.

ஆட்டை அறுக்கும் முன் அதை தனிமைப்படுத்தி படுக்க வைத்து, நீர் புகட்டி, கத்தியைத் தீட்டி ஒரே அறுப்பில் சித்ரவதையின்றி அறுக்க வேண்டுமென்று கட்டளையிடுகிறது இஸ்லாம். அறுப்பிலும் அக்கறை காட்டி, ஒழுக்கமூட்டிய ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றால் அது மிகையில்லை.

ஹஜ்ஜும் குர்பானியும் சொல்லிச் செல்லும் செய்தி இதுதான் : உலகப் பற்றை உதறி விடு! இறைப்பற்றை இறுக்கிப் பிடி! தியாகம் செய்! கூடி வாழ்! உறவைப் பேணு! பாவம் தவிர்! புண்ணியம் புரி! நல்லன நினை! அல்லன அகல்! இருலோக வாழ்விலும் வெல்!
இன்றைய டிஜிட்டல் உலகில் சொகுசு ஹஜ்ஜுப் பயணங்களும், டோர் டெலிவரி குர்பானிகளும் எத்தகைய தாக்கங்களை நமக்குள் விதைத்துச் சென்றிருக்கின்றன என்று ஒன்றுக்குப் பலமுறை பரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.

இல்லையெனில் நமது இறையச்ச உணர்வுகள் எதுவுமற்ற வெறும் உணர்வுகளாய் குன்றிப் போகக் கூடும். இளைத்துப் போன எலும்பும் தோலுமான வெண் புரவிக் குதிரைகளில் ஏறி எங்கனம்வெற்றி வாகை சூட முடியும்..?

நமது இறையச்ச ஆன்மா என்ற குதிரையும் அப்படித்தான். கொழுத்திருந்தால்தான் ஸிராத்துல் முஸ்தகீம் எனும் நியாயத் தீர்ப்பு நாள் பாலத்தில் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று சுவன மாளிகையை சுவீகரிக்க முடியும். இப்பணியை நமது வீட்டு குர்பானி ஆடு கூட செய்யும். ஆனால் அதற்குத் தேவை நிறைய்ய்ய்ய இறையச்சம்தான் நபிகள் நாயகம் நன்றாகச் சொன்னார்கள் :-

நீங்கள் நன்கு கொழுத்த, குறைகளில்லாத, கொம்புள்ள ஆட்டை குர்பானி கொடுங்கள் அதுவே மறுமையில் உங்களுக்கு வாகனமாகும். (மிஷ்காத்)
வாருங்கள் இறையச்சத்தோடு வாழ்வோம்.
இறை நெருக்கம் பெறுவோம்.

About the author  ⁄ Author

No Comments

Leave a Comment