மாநகராட்சியாகிறது தஞ்சாவூர் – ஏற்பாடுகள் மும்முரம்!

தஞ்சை மாநகராட்சியாக மாறுவதை அடுத்து நகரை மேம்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தஞ்சை மாநகராட்சியாக மாறுவதை ஒட்டி  நகரை மேம்படுத்துதல், அழகுபடுத்துதல், அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக ஆட்சியர் என். சுப்பையன் செவ்வாய்க்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டார்.

பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்த மாவட்ட ஆட்சியர் சுப்பையன், “தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கல்லூரி சாலைகளை அகலப்படுத்தி இருவழிப் பாதையாக மாற்றப்படும். அங்கு தெரு விளக்குகளைப் புதிதாக அமைக்கவும், அருகிலுள்ள கண்ணன் நகரில் உள்ள பூங்காவை மேம்படுத்தி நடைபயிற்சி செல்வதற்கு நடைபாதை அமைக்கவும் நகராட்சி அலுவலர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை மேற்கொள்வர்.

திருச்சி பிரதான சாலை, எலிசா நகர் அருகிலுள்ள சாலைகள் அகலப்படுத்தப்படும். சாலை நடுவில் இருவழிப் பாதைக்கு ஏற்றாற்போல் தடுப்பு சுவர் ஏற்படுத்தப்படும். புதிய பேருந்து நிலையத்தில் வடிகால் வசதிகளை ஏற்படுத்தவும், மின் விளக்குகளைக் கூடுதலாகப் பொருத்தவும், அழகு மிளிறும் வகையில் நுழைவு வாயில் அமைக்கவும், புதிய கட்டணமில்லாத நவீன கழிவறைகளை அமைக்கவும், பேருந்து நிலையத்தில் பயணிகள் செல்வதற்கு நடைபாதை அமைக்கவும், அனைத்து வசதிகளுடன் கூடிய வாகனம் நிறுத்துமிடம் மற்றும் அழகு செடிகளுடன் கூடிய பூங்கா அமைக்கவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

புதிய வீட்டு வசதி வாரியம், பழைய வீட்டு வசதி வாரியம் ஆகிய பகுதிகளில் உள்ள பூங்காக்களைத் தரம் உயர்த்தி பொதுமக்களுக்கு நடைபயிற்சி மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு உபகரணங்களை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  ராமநாதன் மருத்துவமனை பகுதியிலிருந்து பெரிய கோவிலுக்கு செல்லும் மேம்பாலம் பகுதி வரை இருவழி பாதைக்கான தடுப்பு சுவர் அமைக்கவும், தேவையான தெரு விளக்குகள் அமைக்கவும், பழுதான மின் கம்பங்களை மாற்றவும் மின் வாரிய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை பூங்காவில் பெத்தண்ணன் கலையரங்கத்தைப் புது பொலிவுடன் மேம்பாடு செய்யவும், புதிய மின் விளக்குகளை அமைக்கவும், குழந்தைகளுக்கான விளையாட்டு ரயில் பாதையைச் செப்பனிட்டு புதிய ரயில் பெட்டிகள் விடவும், குழந்தைகள் விளையாடும் தண்ணீர் சறுக்கு நீச்சல் குளத்தைப் புதுப்பிக்கவும், புதிய வின்ச் கார் பெட்டியை மாற்றவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை சுவர்களில் கலைநுட்பத்துடன் கூடிய அலங்கார ஓவியங்கள் அமைக்கவும், சரபோஜி சந்தையை மறு சீரமைக்கவும், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ராஜப்பா பூங்காவில் மணிக்கூண்டை புதுப்பிக்கவும், வாகனங்கள் நிறுத்துவதற்குத் தனியாக இடத்தை ஒதுக்கவும், மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் வடிகால்கள் வசதிகள் ஏற்படுத்தவும், புதிதாக வரவேற்பு வளைவு அமைக்கவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டன.” என தெரிவித்தார்.

No Comments

Leave a Comment