தனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு

டெல்லி: ஹஜ் பயணத்தில் தனியார் சுற்றுலா ஆபரேட்டர்களுக்கான கோட்டா 20 சதவீதம் குறைக்கப்படுகிறது என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ஹஜ் பயணத்தில் தனியார் சுற்றுலா ஆபரேட்டர்களுக்கான கோட்டா 20 சதவீதம் குறைக்கப்படுகிறது.
இது அடுத்த ஆண்டு சமன்செய்யப்படும். அதே சமயம் இந்திய ஹஜ் கமிட்டியின் மூலம் பெரும்பாலும் ஏழைகளே பயனடைவதால் அதன் கோட்டாவில் எந்தவித மாற்றமும் இல்லை. இது குறித்து யாத்ரீகர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது எனக்கு தெரியும். ஆனால் தியாகம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார். மத்திய அரசின் இந்த அறிவிப்பை இந்திய ஹஜ் கமிட்டி வரவேற்றுள்ளது. அரசின் முடிவை வரவேற்கிறோம் என்று ஹஜ் கமிட்டியின் தலைவர் கைசர் ஷமீம் தெரிவித்துள்ளார். மக்கா, மதீனா உள்ளிட்ட இடங்களில் கட்டுமானப் பணிகள் நடப்பதால் 2013ம் ஆண்டில் அனைத்து நாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்களின் கோட்டாவை சவூதி அரேபிய அரசு 20 சதவீதம் குறைந்துள்ளது.
இதையடுத்து தான் மத்திய அரசும் தனியார் கோட்டாவை குறைத்துள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1.7 லட்சம் யாத்ரீகர்கள் சவூதி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் 1.25 லட்சம் பேர் ஹஜ் கமிட்டியால் தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் தனியார் ஆபரேட்டர்கள் மூலம் செல்வார்கள். இந்தோனேசியாவைப் போன்று இந்தியாவிலும் ஹஜ் நிதி என்ற ஒன்றை கொண்டு வர குர்ஷித் பரிந்துரைத்துள்ளார்.

No Comments

Leave a Comment