ஸகாத் (தர்மம்)

அபூ அய்யூப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து. ‘என்னைச் சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்’ எனக் கேட்டார். அப்போது நபித் தோழர்கள் (வியப்புற்று) ‘இவருக்கென்ன (ஆயிற்று)? இவருக்கென்ன (ஆயிற்று)?’ என்றனர். நபி(ஸல்) அவர்கள் ‘இவருக்கு ஏதோ தேவையிருக்கிறது (போலும்)!” (என்று கூறிவிட்டு அவரிடம்.) ‘நீர் அல்லாஹ்வை வணங்கவேண்டும்: அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது: தொழுகையை நிலை நாட்ட வேண்டும்: ஸகாத் வழங்க வேண்டும்: உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்” என்று கூறினார்கள்  ,(ஸஹீஹ் புகாரி 1396)

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்’ என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும் கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமலானில் நோன்பு நோற்கவேண்டும்” என்றார்கள். அதற்கவர், ‘என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! இதைவிட அதிகமாக எதையும் செய்ய மாட்டேன்’ என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி(ஸல்) அவர்கள், ‘சுவர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப் பார்க்கட்டும்” என்றார்கள். (ஸஹீஹ் புகாரி:1397)

No Comments

Leave a Comment