இலண்டன்: பொருளாதார வளர்ச்சியில் இந்தியா அபார வளர்ச்சி கண்டு வருவதாகவும்,
விரைவிலேயே ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசாகத் திகழும் என்றும் இங்கிலாந்து நாட்டு பொருளாதார சேவை நிறுவனம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.
செபிர் எனப்படும் அந்நிறுவனத்தின் கணிப்பில் 2013ஆம் ஆண்டு உலக பொருளாதார அட்டவணைப்படி இந்தியா தற்போது 11 ஆவது பெரிய நாடாக உள்ளது. 2018 ல் இந்தியா 9ஆவது இடத்திற்கு முன்னேறும். 2023ல் மேலும் முன்னேறி 4வது இடத்தை பிடிக்கும். 2028–ல் 3வது இடத்தை பிடிக்கும். தற்போது மூன்றாம் இடத்தில் இருக்கும் ஜப்பான் பின்னுக்குத் தள்ளப்பட்டு நான்காம் இடத்திற்குச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் சென்ற ஆண்டில் பத்தாவது இடத்தில் இந்தியா இருந்தது. தற்போது இந்தியாவை 11–வது இடத்திற்குத் தள்ளி கனடா 10 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை, நடப்பு கணக்கு பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றால் இந்தியா தற்காலிகப் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்று செபிர் அறிக்கை மேலும் கூறுகிறது. 2023 ல் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 6.56 இலட்சம் கோடி டாலராக உயரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
No Comments