வங்கியில் கணக்கு வைத்திருந்து, ஏ.டி.எம் அட்டை பெற்றிருப்பவர்கள் மட்டுமே தானியங்கி இயந்திரம் மூலம் பணத்தை எடுக்க முடியும்.
இந்த நடைமுறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜன் கூறும் போது, “ஒருவர் அனுப்பும் பணத்தை பெற்றுக் கொள்ளும் பெரும்பாலானவர்களுக்கு வங்கியில் கணக்கு இல்லை. அவர்களுக்கும் பணத்தை ரொக்கமாக பெறும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
அதற்கான திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் படி பணத்தை அனுப்பும் நபரின் வங்கி கணக்கிலிருந்து தொகையை தானியங்கி இயந்திரம் வழியாக பெற்றுக் கொள்ளலாம். பணம் பெறும் நபரின் கைப்பேசிக்கு ஒரு ரகசிய குறியீட்டு எண் வங்கியிலிருந்து அனுப்பப்படும். அந்த எண்ணைக் கொண்டு பணத்தை தானியங்கி இயந்திரம் (ATM) வழியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்திற்கு தேவையான தொழில் நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டு விரைவிலேயே நடைமுறைப்படுத்தப்படும்.. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்க வங்கி மற்றும் கைப்பேசி சேவை நிறுவனங்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் 90 கோடி கைப்பேசி இணைப்புகள் இருப்பதால், இத்திட்டத்திற்கு வாடிக்கையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
No Comments